திருவொற்றியூர் அறியாத ஆன்மிக அன்பர்கள் இவ்வுலகில் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனார், பட்டினத்தடிகள், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் வரலாற்றோடு தொடர்புடைய ஒற்றியூர், இந்நாளில் மக்களால் வெற்றியூர் எனப் பேசப்படுகிறது.
இத்தலத்தின் வரலாறு, பழந்திருக்கோவில், செய்யப்பட்ட திருப்பணிகள், இக்கோவில் கல்வெட்டுகள், இத்தலம் பற்றிய பதிகங்கள், அருள் பெற்றவர்கள், திருவிழாக்கள், திருநாட்கள், பாடப்பட்ட கீர்த்தனங்கள், நிகழ்ந்த அற்புதங்கள் அனைத்தும் அழகாக எவர்க்கும் பயன் தரும் எளிய நடையில் இனிதாக எழுதப்பட்டுள்ளன.
ஒளி திகழும் ஒற்றியூரில் துவங்கி, ஒற்றியூரில் வழிபட்ட அடியார்கள், 66 பேர் வரை, 35 தலைப்புகளில் விரிந்து செல்கிறது இந்நூல். ஒற்றியூர் சித்தர்கள் பூமியென்றும், ஞானியர் கோட்டம் என்றும் தக்க சான்றுகளோடு புகழப்பட்டுள்ளது. அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் வரலாற்று நிகழ்வுகள் தக்கவாறு தரப்பட்டுள்ளன.
பட்டினத்தார் சமாதி திருக்கோவில் பழைய புதிய தோற்றங்கள், கலியநாயனார், தியாகராசப் பெருமான், வடிவுடையம்மன், வள்ளலார் எழில்மிகு வண்ணப் படங்கள் நூலுக்கு அழகூட்டுகின்றன. நூலின் முகப்பில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் தோன்றி அருள் பாலிக்கின்றனர். இறைவுணர்வுடையவர் அனைவரின் கரங்களிலும் இருக்க வேண்டிய ஆன்மிக நூல்.
–கவிக்கோ ஞானச்செல்வன்