‘திப்பு சுல்தான் மதுவிலும், மங்கையிலும் மூழ்கிப்போகாத சிறந்த மன்னர். வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல், பூரண மதுவிலக்கை நிலைநாட்டிய மாமனிதர்’ என்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்ட, திப்பு சுல்தானின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்து நேர்த்தியான நூலாக்கியிருக்கிறார் செல்வபாரதி.
பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் மன்னரின் ராணுவத்தில் ஒரு கடைநிலை ராணுவ வீரராக இருந்து, படைத்தளபதியாகி, மைசூர் அரசையே தன் வசமாக்கிய ஹைதர் அலியின் தீரப்புதல்வர் திப்பு. பலமுறை ஆங்கிலேயரின் தொடர் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல்கள் தொடுத்துப் பணிய வைத்ததோடு, இரண்டாம் மைசூர் போரில் தன் படைபலத்தால் ஆங்கிலேயரை அதிர வைத்தவர். தன் நாட்டைக் காப்பதற்காக மூன்றாம் மைசூர் போரில், இரு இளம் மகன்களை பிணைக்கைதிகளாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது வருந்த வைக்கிறது.
திப்புவின் நிர்வாகத் திறமைக்குச் சான்றுகளாக, தன் பேரரசில் மேலைநாட்டு நிர்வாக முறைகளை செயல்படுத்தி மாகாணங்களை விரிவுபடுத்தியது; புதுமையான தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டது; நாட்காட்டி, எடை, அளவு, தூரம் போன்றவற்றில் புதிய சீர்திருத்தங்கள் செய்தது எனப் பலவற்றைப் பட்டியலிடுகிறார் நூலாசிரியர். அனைத்து மதத்தினருக்கும் கொடைகள், கோவில் குளங்கள் பராமரிப்பு, சிருங்கேரி சுவாமிகளுக்கு எழுதிய, 15 கடிதங்கள் போன்றவை திப்புவின் மத நல்லிணக்கத்தை பறைசாற்றுகின்றன. அந்நாளிலேயே மைசூர் போரில் பீரங்கிகளையும், ராக்கெட்டுகளையும் பயன் படுத்திய திப்புவின் திறம் போற்றத்தக்கது. பல தரப்பினரும் படிக்கவேண்டிய நூல்.
– மெய்ஞானி பிரபாகரபாபு