செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும்.
பறவையினத்தின் தோற்றத்தை விரித்துரைக்கும் முன், ‘பிக்பாங்க்’ கோட்பாடு, பால்வெளி மண்டலங்கள், நட்சத்திரத் தொகுப்புகள், சூரியக்
குடும்பத்தின் தோற்றம், ஒளி, வெப்பம், அணுக்கதிர் வீச்சு ஆகியவற்றால் பால்வெளியில் தகிப்பு போன்ற பல்வேறு புவியியல் தகவல்களும் நூலில் இடம்பெற்று உள்ளன.
இடையிடையே ஏற்பட்ட மாபெரும் இன அழிவுகளும், அவற்றுக்கான முக்கிய காரணங்களும், அவற்றிற்குப் பிந்தைய மீட்சிகளும் சுருக்கமாகத்
தரப்பட்டுள்ளன.
பாலூட்டிகளின் ஆரம்ப காலமாகக் கருதப்படும், 18 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய லியோசின் காலத்தில், இரு கால்களில் நடக்கும் மனித இனம் பரிணமித்ததாகவும், பிந்தைய ஜுராசிக் காலத்தில் பறவையினம் மரம் சார்ந்த டைனோசர்களிடம் இருந்தே பரிணமித்திருக்க வேண்டும் என்றும்
கருதப்படுகிறது.
முன்னொரு காலத்தில் எழுதுபொருளாகவும், ஓவியத் தூரிகையாகவும்கூட பயன்படுத்தப்பட்ட இலகுவான இறகுகளுக்குப் பின்னால் உள்ள வலிமையான அறிவியல் உண்மைகள், படிப்போரை வியக்க வைக்கும். நிலம் விட்டு உயிரெழும்ப, வானத்தில் பறக்க, உயர்வெளியில் மிதக்க, திசைகள் மாற்ற, காற்றழுத்தம் எதிர்கொள்ள, குஞ்சுகளுக்காக நீர் சேமித்துக்கொணர, உடல் வெப்பம் சீராகக் காக்க, தன்னைத்தானே பாதுகாக்க, தோலின் தூய்மை காக்க, இனப்பெருக்க கருவியாக உதவும் இறகுகளின் பல நுட்பமான விபரங்களை நூதனமாகப் பகர்கிறது இந்நூல்.
பறவைக்கு பறவை வேறுபடும் சுவாச மற்றும் ரத்த ஓட்ட மண்டலங்களின் செயல்பாடுகள், அலகுகளின் அளவுகள், குரல் வளங்கள், கண்கள், இனவிருத்திக்கு ஆயத்தமாக்க வைக்கும் பருவகால வாசனைகள் போன்ற அரிய செய்திகளும் நூலில் உள்ளன. பறவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வு முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் தான் முதன் முதலில் பறவைகள் பற்றியும் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டோவியங்களை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம். இந்நூலை, புரிந்துணரக்கூடிய சீரான தமிழ் நடையில் உருவாக்கியிருக்கும் நூலாசிரியர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
–மெய்ஞானி பிரபாகரபாபு