இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர் கூறுவர்.
இம்மும்மணிகளில் பிரம்ம சூத்திரம் வியாச முனிவரால் எழுதபட்டு, பின் ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரால் உரை விளக்கங்கள் எழுதப்பட்டன.
இந்நூல், ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி உரையை, மிக எளிய தமிழில், யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிவந்து உள்ளது.
வேதங்கள் கர்ம காண்டம், பிரம்ம காண்டம் என்று இருவகை பிரிவு உடையது என்றும் (பக். 11), தத்துவங்கள், மூன்று என்று கூறி அவற்றை விளக்குவதும் (பக். 20) பிரம்ம சூத்திரத்தின் அறிமுகமாக வேதாந்தத்தை விளக்குவதும், நாத்திக மதங்களின் பிரிவுகளை கூறுவதும் (பக். 24) பிரம்ம சூத்திரத்தின் 4 அத்தியாயங்களையும் நான்கு பாகங்களாக விளக்குவதும், (மொத்தம் 16 பாதங்கள்) (பக். 51 – 208) யார் கடவுள்? என்ற தலைப்பில் ஆன்மிக விளக்கம் தருவதும் (பக். 209) நூலாசிரியரின் ஆழ்ந்த – அகன்ற – பன்மொழிப்புலமையை நமக்கு தெரிவிக்கின்றன.
ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டாகக் கொண்டாடப்படும் இவ்வாண்டில், இந்நூல் வெளிவந்திருப்பது ஆன்மிக அன்பர்களுக்கு மிக்க மகிழ்வைத் தரும் என்பதில் ஐயமில்லை. நல்ல பயனுள்ள நூல்.
–கலியன் சம்பத்து