ஜேகே என்கிற ஜெயகாந்தன் என்கிற எழுத்துச் சித்தரின் நூல் வடிவம் பெறாத பேட்டிகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் என, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவற்றைத் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர்.
பொதுவுலக வாழ்க்கையிலும், எழுத்துலக வாழ்க்கையிலும் ஜெயகாந்தன் யார் என்பதைப் பற்றி, அவருடைய வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவும்.
ஜெயகாந்தன் வலம் வராத துறைகளே இல்லை என்பதற்குச் சான்றாக, சினிமா, நாடகம், இலக்கியம், அரசியல், படைப்புலகம் என, அவர் சார்ந்த துறைகளின் கூறுகள் அனைத்தும் இதில் இருக்கின்றன.
ஒவ்வொரு பேட்டியிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஜெயகாந்தன் சொல்லும் பதில்கள் அதிக சுவாரசியமானதாக இருக்கின்றன.
சுந்தர காண்டம் நாவல் பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி, ‘சீதாவைப் போன்ற பெண்கள் பெருகினால், பாரதி கண்ட புதுமைப் பெண் கனவுகள் பொய்த்துப் போகுமல்லவா?’ அதற்கு ஜேகே சொல்லும் பதில், ‘கனவுகள் பொய்த்துப் போவது தானே, நிஜங்களாய் அவை செழித்துவிடும்’ (பக். 61).
இப்படிப் பல வாசகர்களின் கேள்விகளுக்கு, மனசாட்சிக்கு நியாயமாகவும், நிதர்சனத்துக்குக் குறைவில்லாமலும் பதில்கள் சொல்லி அசத்தி இருக்கிறார்.
‘புத்தகங்கள், இலக்கியங்கள் யாவும் பொய்யாகி விடாது; அது பழசாகி விடாது. நல்ல நூல்கள் என்றைக்கும் புதுமையாகவே இருக்கும்.
‘இன்றைக்கு நான் எழுதினால் அது புதுமையாக இருக்கும் என்று நீங்கள் எண்ணுவது தவறு’ என்று, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருப்பதைப் படிக்கும்போது, எழுத்துக்கும், அவருக்கும் இருக்கும் நெருக்கத்தின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது.
ஜெயகாந்தன் வாழும் காலத்தில் அவர் பற்றிப் பரவிய பல விமர்சனங்களுக்கு, இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கிறது. இதை, அவருடைய மகன் ஜெ.ஜெயஸிம்ஹன் தொகுத்து இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தத் தொகுப்பில் அதிகமான பேட்டிகளும், கேள்வி – பதில்களும் இருப்பதால், படிப்பவர்களுக்கு ஒருவித அலுப்புணர்வு தோன்றலாம். ஆனால், ஜெயகாந்தனின் ஆளுமையும், தனித்துவமும் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்கு புதுவித அனுபவத்தை நிச்சயம் தரும்.
– மனோ