சாந்தகுமாரி சிவகாட்சம் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களையும், மூன்று நாவல்களையும் எழுதி இருக்கிறார். உலகம் சுற்றும் தமிழச்சியான இவர் ஏராளமான பயணக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்திருக்கிறார்.
மனிதர்களை மரங்களோடு சம்பந்தப்படுத்தி இவர் எழுதியுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழுக்கு ஒரு நல்ல பங்களிப்பு!
மரம் மனித வாழ்க்கையின் உயிர் நாடி. மனித சமுதாயம் மரங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதன் விளைவு தான் இப்போதைய இயற்கையின் சீற்றம். சாந்தகுமாரியின் இந்தச் சிறுகதைகள், மரங்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும்!
‘பலா மரம்’ என்று ஒரு சிறுகதை. ஒரு பலா மரத்தை, அந்த மரம் வாழும் வீட்டினரும், அக்கம் பக்கத்தில் உள்ளோரும் நேசிக்கின்றனர்.
அந்தப் பலா மரம் தரும் கனிகள் மிக மிக இனிப்பாக இருக்கின்றன. ஒரு காலக்கட்டத்தில் அந்த இனிய பலா, பட்டுப் போகிறது. மரம் வளர்த்தவர், அந்தப் பலா மரத்திற்குத் தகுந்த வாரிசு இல்லையே என்று ஏங்குகிறார்.
தன் நண்பர் வீட்டுக்குச் செல்கிறார். அந்த மரத்தின் பலாக் கொட்டையை மண்ணில் நட்டு, நண்பர் ஒரு புதிய பலா மரத்தை உருவாக்கி இருப்பதை அறிந்து சிலிர்க்கிறார், பூரிக்கிறார். வாரிசு இருப்பதை அறிந்து நெகிழ்கிறார்!
‘முருங்கை மரம்’ என்ற கதையின் நாயகன் குமணன், ஒரு முருங்கை மரத்தைக் குழந்தைப் போல் போற்றி வளர்க்கிறான். தன் குழந்தையின் மேல் கம்பளி பூச்சி ஊர்வதைத் தாங்க முடியாமல், கடைசியில் அந்த மரத்தை வெட்டி எறிகிறான்.
‘ஒவ்வொரு மரமும் போதி மரம், எனக்கு அது ஒவ்வொரு நாளும் சேதி தரும்’ என்று சொல்லாமல் சொல்கிறார் சாந்தகுமாரி.
இந்த சிறுகதைத் தொகுதி, சில மகளிர் கல்லூரிகளில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது, இந்த நூலின் சிறப்பைச் சொல்லும்!
– எஸ்.குரு