தமிழகத்தில் பழநி முருகனை வழிபடாத பக்தர்கள் எண்ணிக்கை குறைவு. நல்ல தமிழ்ப்புலவர் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில், ‘வேண்டினர் வேண்டியாங்கு எய்த’ என்றும், முருகனைத் ‘தானைத்தலைவா’ என்றும் அழைப்பார். அனைத்து கடவுளர்களும் வழிபடும் தண்டாயுதபாணி, மக்களுக்கு அனைத்துவித செல்வங்களும் தரவல்லவன்.
இந்த ஆங்கில நூல், பழமை வாய்ந்த கலாசார கேந்திரமான பழநியின் தொன்மை, கல்வெட்டு சிறப்புகள், முருக வழிபாடு, தென் மாநிலங்களில் தொன்று தொட்டு நீடிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை எடுத்தியம்புகிறது. பக்தர்கள் வழிபடும் இடம் என்பதுடன் சமூக வாழ்வை மேம்படுத்தும் தலம் என்பதையும் ஆசிரியர் சிறப்புற விளக்குகிறார். தத்துவ அறிஞர் என்ற முறையில், ஆசிரியர் பார்வை உள்ளது.
பழநியை அன்றைய தமிழகம் வைகாவூர் என்றும், கொங்கு மண்டலப் பகுதியாக அழைக்கப்பட்டது என்றும், தாண்டிக்குடி, விருபாட்சி அடங்கிய மலைப்பகுதி யில் இந்தக் கோவில் அமைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பழநியில், எல்லா மதத்தினரும் வாழ்வதையும், முஸ்லிம்களில் லெப்பை பிரிவினர் முருகனுக்கு காணிக்கை தருவதையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது, நம் கலாசார பெருமையைக் காட்டுகிறது.
நக்கீரர் காட்டும், ‘ஆவினன் குடி உறைதலும் உரியன்’ என்ற கருத்தையும், பழநியையும் இதில் விளக்கும் ஆசிரியர், இறைவன் இத்தலத்தில் சித்தர் உருவில் அருள் பாலிக்கிறான் என்ற தகவலை வைத்திருக்கிறார். அதில் அன்னை பார்வதி, அப்பன் சிவபெருமானிடம் பழம் பெற அவரும், அவர் தமையனும் மேற்கொண்ட புராண நிகழ்வையும் குறிப்பிடத் தவறவில்லை. இன்றுள்ள பழநி பற்றிய தகவலில், சேரர் நாடாக இருந்த இப்பகுதியில், கலையாம்புத்தூர் பகுதியில் அதிக அளவு ரோமானிய காசுகள் கிடைத்ததை குறிப்பிடுவதன் மூலம், 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகரிக நகரம் என்பதை விளக்குகிறார்.
சோழ, பாண்டிய மன்னர் ஆளுகையிலும் இந்த நகரம் வளர்ந்ததையும், அதற்கான ஆவணங்களையும் சிறப்பாக ஆசிரியர் பதிவு செய்கிறார்.
முருகன் என்றால், நறுமணம், ஸ்கந்தா, அழகு, தெய்வீகம், தேன் என்று பல வற்றை விளக்கும் ஆசிரியர், ‘அரும்பொருள் மரபின் பெரும்பெயர் கொண்டவர் முருகன்’ என்ற பழமை வாசகத்தையும் தந்திருக்கிறார். முருகன் என்பது வீரம், அழகு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது என்றும், வரலாற்றுக் காலத்திற்கு முன் கிடைத்த சான்றுகளில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த வேல், முருகப்பெருமானின் வேலைப் போன்றது என்ற பதிவு, இந்தப் பதியின் சிறப்பை உணர்த்துகிறது.
தமிழக மக்களுடன் ஒன்றிய முருகன் இத்தலத்தில் தண்டாயுதபாணியாக நிற்கும் நிலை, நவபாஷாண கல்லால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும் பூஜை காலத்தில், ராஜா வேடம், ஸ்கந்தன் தோற்றம், பாலசுப்ரமணியர் வடிவு என்று அழகுபடுத்தப்படுகிறார். இது, பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைகிறது என்பதை பதிவு செய்த ஆசிரியர், திருவாவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் நடைபெறும் வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்கியது சிறப்பாகும்.
மலைக்கோவிலில், மலைக்கொழுந்து அம்மன், பத்ரகாளி, வன துர்க்கை, அருணகிரி நாதர் ஆகிய சிற்ப சிறப்புகளை விளக்கும் போது, அக்கோவிலில் மொத்தம், 31 ஐம்பொன் சிலைகள் இருப்பதை பதிவு செய்திருக்கிறார். அதே போல திருவாவினன் கோவிலில், இடம்புரி விநாயகர், மீனாட்சி அம்மன் சிலைகள் இருப்பதாக தெரிவிக்கும் ஆசிரியர், முருகனின் தானைத் தலைவர் வீரபாகு இருப்பதையும் விளக்கி இருக்கிறார். இத்தல வரலாறு, மன்னர்கள் அளித்த தான பட்டயங்கள், கோவில்களின் விமான அமைப்பைக் காட்டும் வண்ணப்படங்கள், கோவில் வரைபடம், உற்சவமூர்த்தி சிலைகள் மற்றும் காவடிகள் உட்பட பல்வேறு காட்சிகள், நூலை முழுமையாக காட்டுகின்றன. படித்த இளைஞர்கள் இந்த நூலைப் படித்தால், தமிழகத் தொன்மை அதிகம் மேம்படும்.
– பாண்டியன்