கஜினி முகம்மது, சோமநாதா கோவிலின் மீது படையெடுத்தது ஏன்? இந்துக்களின் வழிபாடு பிடிக்காததினாலா? அல்லது கொள்ளையில் கிடைக்கும் செல்வத்தின் காரணத்தினாலா? அல்லது மேற்கிந்தியாவின் வழியாக அரபு வணிகர்களுடன் நடைபெற்ற குதிரை வணிகம், கஜினாவி நகரின் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியான குதிரை வணிகத்தைப் பாதித்ததினாலா? என, பல்வேறு அம்சங்களைப் பல்வேறு தரவுகள் மூலம் பட்டியலிடுகிறார் நூலாசிரியர்.
கஜினி முகம்மது கி.பி., 1206ம் ஆண்டில் சோமநாதா கோவிலை தாக்கியதோடு மட்டுமல்லாமல், உலுகான் என்பவர், 1299ம் ஆண்டில் சோமநாதா கோவிலை தகர்த்து மசூதி கட்டினார் என்றும், முஜாபர்கான் என்பவர், 1395ல் கோவிலை தகர்த்து மசூதி கட்டினார் என்றும் தொடர்ந்து பலரும் அதைத் தரைமட்டமாக்கி மசூதியை நிறுவியதாகவும் கதைகளும், வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
ஒரு முறை கோவிலை இடித்து விட்டு மசூதி நிறுவப்பட்டதென்றால், மறுமுறை மசூதியைத் தானே இடித்திருக்க முடியும் என்ற விவாதத்தை எழுப்புகிறார் நூலாசிரியர். கஜினி முகம்மதுவிற்கு முன் சிந்துப் பகுதியை வென்றவர்கள் அரேபியர்கள். ஆனால், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அரசியல் அதிகாரத்தின் துவக்கப் புள்ளியை கஜினியிடம்இருந்தே ஆரம்பிக்க விரும்பினர்.
கடந்த இரு நூற்றாண்டுகளில் எழுந்த அரசியல் தேவைகளின் காரணமாக, கஜினி முகம்மது பற்றிய பார்வைகள் மாறுபட்டுள்ளன. சோமநாதா படையெடுப்பை ஒட்டி, துருக்கிய பாரசீக ஆவணங்கள் கஜினி முகமதை உருவ வழிபாட்டை எதிர்ப்பவராகவும், இஸ்லாத்தின் பாதுகாவலனாகவும் காட்டிக் கொண்டன. கஜினி முகம்மதின் படையெடுப்பை அதற்கு உரிய வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்ப்பது, கடந்த கால வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளை புதிய வெளிச்சத்தில் காண உதவும் என்கிறார் நூலாசிரியர்.
– புலவர் சு.மதியழகன்