கவிஞர் கோ.வசந்தகுமாரன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். கடந்த, 30 ஆண்டுகளாக தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மனித வள மேம்பாட்டுத் துறையின் உதயபாரதி தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, சாகித்ய அகாடமியின், ‘INDIAN LITERATURE’ – இதழில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டன.
காகிதம் திருடியேனும் எழுதலாம் கவிதை / சமுதாயம் திருத்த – எனும் குறுங்கவிதை அருமையானது!
எதையாவது தொணதொணத்துக் கொண்டிருப்பாள் கிழவி / கிழவி இறந்த பிறகு ஊமையாகி விட்டது/ வீடு – என்று பாட்டியின் பிரிவுக்காக ஏங்குகிறார்...
ஒரு முறை சொல் உண்மையை / இரு முறை சொன்னாய் / சந்தேகம் வரும் / என்ற கவிதை, நம்மை சிந்திக்க வைக்கிறது.
யாரிடம் கேட்பது / யாசகம்? எல்லார் கைகளிலும்/ பிச்சைப் பாத்திரம் என்ற கவிதை நம்மைச் சிரிக்க வைக்கிறது!
சின்னச் சின்னக் கவிதைகளிலேயே நம்மைச் சிலிர்க்க வைக்கும் வசந்தகுமாரன், நீள் கவிதைகள் எழுத வேண்டும்!
– எஸ்.குரு