திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார்.
தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து நீங்கப்பெற்றுச் சைவரானார். இவ்வரலாறு பலரும் அறிந்தது. இறைவனே இட்டழைத்த பெயர் நாவுக்கரசர். அக்காலத்தில் சைவம், வைணவம் எனும் அகச்சமயங்களன்றி, சமணம், பவுத்தம் எனும் புறச் சமயங்களும் ஓங்கியிருந்தன. மன்னனும் சமணனாகினான். சமணர்களின் தூண்டலால், நாவுக்கரசர் பற்பல கொடுமைகளுக்கு ஆளாகி, சண்டாளரிடமிருந்து சிவனருளால் தப்பினார்.
கல்லிலுள் கட்டி கடலினுள் பாய்ச்சிய போதும், ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து அவருக்கு புணையாகி தப்பினார். அவர் தலம் தலமாகச் சென்று திருப்பாடல்கள் பாடினார். அவை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாக தேவாரத்தில் உள்ளன.
அப்பாடல்களில் சமணர்களின் வாழ்க்கை முறை, மோசமான பழக்கங்கள் பற்றியும் விரிவாக உள்ளது.
அப்பர் பெருமானா இப்படியெல்லாம் பாடினார் என்று நாம் வியக்க நேர்கிறது. மேற்கோள்? இதோ, ‘முடையரைத் தலைமுண்டிக்கும் மொட்டயரைக் கடையரை’முடைநாற்றம், தலைமழித்து மொட்டை, பண்பிலாமை உடையவர்கள் என்று பழித்து, அவர்களிடமிருந்து தன்னை மீட்டபெருமானை பழையாறை வடதளியில் பாடிய தேவாரத்தில் இடம்பெற்ற செய்தியாக காணலாம்.
‘குண்டாக்க னாய் உழன்று கையில் உண்டு, குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி உண்டிஉகந்த மணனேநின்று’ குண்டர்களாய்த் திரிபவர் என்றும், கைகளிலேயே உணவையேற்று உண்டு வாழ்பவர் என்றும், பெண்கள் முன்னே நாணமின்றி அம்மணமாய் நின்று உண்டி உகப்பார் என்றும் சாடியிருப்பவர் நம் அப்பர் பெருமான் தான்.
ஊத்தவாய்ச் சமணர்க்கு ஒரு குண்டனாக, கண்டவர்க்கு பொல்லானாய் (ஆடையின்றி), தானிருருந்த நிலைக்கு வருந்தி, தன்னை ஆட்கொண்ட பெருமானே என்று பாடியுள்ளார்.
‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’ என்றும், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றும், ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ என்றும் பாடிய நாவுக்கரசர், மறைக்கதவும் மூடப்பாடிய பெருமான்.
நூலாசிரியர் எளிய தமிழ்நடையில் அரிய கருத்துகளை அழகாக அடுக்கி எழுதியுள்ளார்.
சைவ சமயத்தின் சிறப்பையும், சிவன் அப்பரை ஆட்கொண்டருளிய திறத்தையும், அப்பர் பெருமானின் அளப்பரிய பெருமைகளையும், பிற அடியார் குறிப்புகளையும் இணைத்து, எழுத்துத் திறனொடு இந்நூலை முயன்று படைத்துள்ளார். ஆய்வுச் செய்திகளும் இடையிடையே இடம்பெற்றுள்ளன. ஆம், ஓர் அரிய நூலைப் படித்த மகிழ்வை வாசகர் பெற முடியும். அப்பர் பெருமானின் பிறசமயத் தாக்குதலையும் (மறுபக்கம்) அறிய முடியும்.
– கவிக்கோ ஞானச்செல்வன்