வைணவப்பெரியார்களுள் ஸ்ரீ ராமானுஜரை அறியாதவர் யாரும் இரார். அப்பெரியார் பிறந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
ராமானுஜரிடம் ஒரு பாமரப்பெண் வைணவப் பெரியார்களின் அருஞ்செயல்களாகச் சொன்னவற்றின் சூட்சுமத்தை, 81 வாசகங்களாக்கி மிக எளிய நடையில் ஆசிரியர் இந்நூலுள் எழுதியுள்ளார். ஆசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர், இயக்குனர் எனப்பல பொறுப்புகளையேற்று வெற்றி நடைபோடும்,முன்னாள் வங்கிப்பணியாளர்.மகாபாரத்தையும் எளியநடையில் எழுதியுள்ளார்.
108 திவ்விய தேசங்களுள் திருக்கோளூர் மதுரகவியாழ்வார் அவதரித்த தலம். இங்கு எழுந்தருளியுள்ளவர் வைத்த மாநிதிப்பெருமாள்.ஊரின் பெருமையறிந்து பலர் அவ்வூரில் வந்து குடியேற, ஒருபெண் வெளியேறுகிறாள்.
எம்பெருமானாருக்கு வியப்பு. அப்பெண்ணிடம் வெளியேறக் காரணம் என்ன என்று, ராமானுஜர் வினவ, 81 பெரியார்கள் செய்த அருஞ்செயல்களைச் சொல்லி நான் அப்படி ஏதும் செய்யாமல் இப்புனித மண்ணில் இருக்க லாமா என்றாள் பதிலாக அப்பெண். அப்படி அந்தப்பெண்மணி வைணவ நலன்கள் எண்பத்தொரு வைணவப்பெரியார்களின் செயல்களைப் பட்டியலிட்டாள். ‘அகமொழித்து விட்டேனோ விதுர ரைப்போல, தசமுகனைச்செற்றேனா பிராட்டியைப் போல, உடம்பை வெறுத்தேனோ திருநரையூரர்போல...’ இப்டிப் பலவேறு கதைகளின் சாரத்தை உரைத்தாள் மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்று சொல்லப்படுகிறது.
வைணவத்தைச் சாறு பிழிந்தாற்போல் உள்ள இக்கதைகள் படித்து அறிந்து மகிழத்தக்கவை.வைணவர் மட்டுமன்றி அனைவரும் படித்துப் பயனடையலாம்.
–கவிக்கோ ஞானச்செல்வன்