மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பதற்கு, அவர்களின் வல்லமையும், மூலிகை மருத்துவமும், சித்து விளையாட்டுகளும் சாட்சியாக நம்மோடு பயணிக்கின்றன என்ற செய்தியும் உண்டு.
‘ராமனை வனத்துக்கு போகச் சொன்னது, அவனைத் தவிக்க விடுவதற்காக அல்ல; தழைக்க விடுவதற்காக...’ போன்ற வரிகள், ஆசிரியரின் நாவலுக்கே உரிய வழக்காகவும் படைத்திருப்பது, வாசிப்போரின் எண்ணத்தை கவரும்.
– முனைவர் க.சங்கர்