ஹிந்து மதத்தில், தீண்டாமை கொடுமைகள் அதிகம் இருந்த காலத்திலேயே, அதை மறுத்து, புரட்சி செய்து வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமானுஜர். அவரின் ஆயிரமாண்டு விழாவில், ராமானுஜர் பற்றிய தொகுப்பை, இந்த நூல் காட்டுகிறது.
ராமானுஜர் பற்றி, உபன்யாசகர்கள், தமிழறிஞர்கள் கூறியுள்ளது, மிக சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. திருமலையில் ஜீயர் மடத்தை ராமானுஜர் ஸ்தாபித்தது பற்றி விளக்குகையில், திருப்பதி கோவில் அதிகாலை திறப்பு நடைமுறையை ஏற்படுத்தி, அது இன்றளவும் பின்பற்றப்படுவதை அந்த அந்த மடத்தின் ஜீயர் சுவாமிகள் தெரிவித்த விதம் சிறப்பாகும்.
தமிழுக்கு வைணவம் மூலம் ராமானுஜர் ஆற்றிய தொண்டை, ஏ.வி.ரங்கச்சாரியார், அழகு நடையில் எழுதியுள்ளார். வைணவ திருக்கோவில்களில், தமிழுக்கு ராமானுஜர் அளித்த முக்கியத்துவம், அதிலும் பலவகைப் பழங்கள், பாலமுது ஆகியவற்றை பெருமாளுக்கு உணவாக படைக்க வைத்த விதம் பிரமிக்க வைக்கிறது.
ராமானுஜருக்கு ஜாதி வேறுபாடின்றி, 700 சீடர்களுக்கு மேல் இருந்ததை, கோகுலாச்சாரி, தெளிவாக விளக்கியுள்ளார். இப்படி ராமானுஜர் பற்றி, தெரியாத பல விஷயங்கள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், 108திவ்ய தேசங்களில், பல கோவில்களில் அருள்பாளிக்கும் பெருமாளின் புகைப்படங்கள், புத்தகத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.
எல்லாவற்றிலும், திருக்கோட்டியூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், குருவின் வார்த்தையை மீறி ராமானுஜர் தெரிவித்த சூட்சும மந்திரம், அவரது விரிந்த உள்ளம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆனாலும், அவர் தெரிவித்தது எது என்பதை முடிவாக சம்பிரதாயம் வல்ல பெரியார் விளக்கவேண்டும் என்ற தகவல், அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பது, வைணவநெறியின் அளவிலாக் கட்டுப்பாட்டையும் உணர்த்துகிறது.
குறிப்பாக, திவ்ய தேசங்களில், முதல் தலமாக கருதப்படும், திருவரங்கத்தில் அருள் பாலிக்கும் ரங்கநாதருக்கு, ராமானுஜர் ஆற்றிய நிர்வாகத் தொண்டுகளை படிக்க படிக்க, ஆர்வம் ஏற்படுகிறது. சிறப்பான கட்டுரைகள் அனைத்தும் வைணவ நெறி வார்த்தைகள், அலங்காரங்கள், தொண்டின் மாண்பு குறித்த கருத்துக்கள் ஆகியவை அந்த நெறி நிற்கும் பலரை அதிகம் ஈர்க்கும் என்பது இந்த நூலின் சிறப்பாகும்.
கருடன், குதிரை வாகனங்களில், ரங்கநாதர் அருள்பாலிக்கும் படங்கள், பெருமாள், தாயாரின் படங்கள் வண்ணத்தில் மிளிர்வது மிக அருமை.
ச.சு.,