தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், திருமந்திரப் பாடல்கள், 3,000 இயற்றினார் என்றும் கூறுவர்.
திருமந்திரப் பாடல்களில் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவன. முயலும் செயல்களில் வெற்றி பெற திருமந்திரம் துணை செய்யும்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் திருமந்திரத்தில் உள்ளன என்பதை நுாலாசிரியர் எளிய முறையில் விளக்கியுள்ளார்.
‘அன்பும் சிவமும் இரண்டல்ல. அன்பே சிவமாகும்’ என்பதை விளக்கி, கடவுள் அன்புமயமானவன் என்கிறார். பக்தியும் வாழ்க்கையும் சிறப்பதற்கு அன்பே அடிப்படை.
அன்பே வடிவான கண்ணப்பர் தன் கண்ணையே எடுத்து இறைவனுக்கு அளித்தார் என்பது பெரியபுராணம்.
போலிச் சாமியார்களின் ஏமாற்று வேலைகளைக் கூறி, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுகிறார், நுாலாசிரியர்.
போலிச் சாமியார்களால் நாட்டில் துன்பங்களும், தொல்லைகளும் தலைவிரித்தாடுகின்றன. மனைவியர் பலருடன் வாழ்ந்த பொய் வேடத் துறவிகளின் வாழ்க்கைக் கதைகளையும் குறிப்பிடுகிறார்.
விவசாயிகளை ஏமாற்றுவதற்காக, வலிமை இல்லாத பசு, புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு, வயலில் பயிர்களை மேய்வது போன்றது பலரின் துறவு வேடம். இதைத் திருக்குறளும் விளக்குகிறது.
பத்திரகிரியார், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், ராமானுஜர், திருநாவுக்கரசர் பெருமான் (அப்பர்) போன்றோர் பற்றிக் குறிப்பிட்டு அவர்களின் பாடல்களை மேற்கோள்களாகக் காட்டி விளக்கும் முறை நன்று.
யாரும் நீர் ஊற்றாமல் தானே வளர்ந்து பயன் தரும் பனைமரம், அடிக்கடி நீர் ஊற்றினால் பயன் தரும் தென்னை மரம், இப்படி இரண்டு வகையான வாழ்க்கையை மக்களிடத்தில் பார்க்கிறோம் என்பதை அழகு விளக்கியுள்ளார் ஆசிரியர் வேணு. சீனுவாசன்.
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதை விளக்கியுள்ளார். வாழ்க்கையை விளக்கும் பயனுள்ள நல்ல நுால்.
– பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்