கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில் இந்நுாலாசிரியர் தொகுத்துள்ளார்.
உணவகத்தில் சென்று அமர்ந்ததும் உள்ளே இருக்கும் உணவு வகைகளைக் காட்டும் விலைப் பட்டியல் (மெனு) கையில் தந்து விடுவர். ஆனால், அண்மையில், வரும் பல நுால்களின் முதல் இடத்தில், ‘பொருளடக்கம்’ இருப்பதில்லை. இந்த நுாலிலும் ‘கந்த புராணம்’ தலைப்பைப் பார்த்து, வெகு ஆர்வமுடன் தேடினேன். கடைசி, 84வது பக்கத்தில் கந்த புராணம். முன்பகுதியில் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை, புறநானுாறு, அகநானுாறு, குறுந்தொகை, கல்லாடம், சிலப்பதிகாரம் போன்ற செந்தமிழ் இலக்கியங்கள் போற்றும், செவ்வேள் பற்றிய பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.
பன்னிரு திருமுறைகளில், முருகன் பற்றிய பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சிவக் கவிமணி, சி.கே.சு.,வின் திருச்செந்துார் சொற்பொழிவு சேர்க்கப்பட்டு உள்ளது. கம்ப ராமாயணம், வில்லிபாரதம், அருணகிரிநாதர் திருப்புகழ், முருகன் பெருமை பேசும் பாடல்கள் அணிவகுத்து நிற்கின்றன. குமரகுருபரர் பேசா நிலையினின்றும், செந்திலாண்டவன் அருளால் பாடிய கந்தர் கலிவெண்பா படிப்போருக்கு பயன்தரும்.
பாரதியார், கவிமணி, நாமக்கல்லார் முருகன் பாடல்களுக்குப் பின் இறுதியில் கந்த புராணக் கதைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
ராம அவதாரம் ராவணனையும், கிருஷ்ண அவதாரம் நரகாசுரன் முதல் பல அசுரர்களையும் அழிக்க வந்தது. ஆனால், முருகனோ, சூரபதுமனை அழித்து, சேவலும் மயிலுமாக ஏற்றுஅருள் செய்த நிலையை குறிப்பிட்டுள்ளார். முருகன் பெருமை பேசும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்.