சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சமூகவியல் கலை பண்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் பத்மாவதி விவேகானந்தன். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.
பெண்ணுரிமைப் போராட்டத்திற்கான மிக முக்கியமான அம்சம், அடிமைத்தனத்தில் ஊறிக் கிடக்கும் அவளை அந்த அடிமைத் தனத்தை உணரும்படி செய்வது தான். தன்னை அறிந்து கொண்டு விட்டால், பின் எல்லாம் தானாகவே நடந்துவிடும். அதற்கான மிக முக்கியமான வடிவங்களில் ஒன்று தான் பெண் எழுத்து.
அரசியல் அதிகாரத்திற்குமான தடைக் கற்களுக்கும், குடும்பம் மற்றும் மத நிறுவனங்களின் சுரண்டல் போக்கிற்கும் எதிராகப் போராடும் முக்கிய ஆயுதம்.
இத்தகைய வீரியமிக்க பெண் எழுத்தை இன்று பலர் எழுதி வருகின்றனர். பாரதி, பாரதிதாசனைப் போல, பெண்ணுரிமை வேண்டி நிற்கும் ஆண்களும் எழுதி வருகின்றனர்.
பெண் – சமூகம் – சமத்துவம் என்ற இந்த நுால் பெண்ணியத் திறனாய்வு பற்றியதாகும். பெண்ணியத் திறனாய்வு, கிராமப்புறப் பெண்கள் முன்னேற்றம், பெண்ணியத் திறனாய்வில் மணிமேகலை, ஜீவா கண்ட பெண் சமுதாயம், புதுமைப் பித்தனில், ஆண் – பெண் சமத்துவம், குலோத்துங்கன் கவிதைகளில் பெண்மை போன்ற கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன.
எங்கெல்லாம் பெண்கள் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனரோ அங்கெல்லாம் ஒழுக்கம் ஆண்களின் சாயலாகவே இருக்கும் என்கிறார், கம்யூனிஸ்ட் தோழர் ஜீவா. ஒழுக்கம் என்ற சக்கரங்களின் அடியில் பெண்கள் இரக்கமின்றி அரைக்கப்படுகின்றனர் என்கிறார், ஜீவா (பக்கம். 110) ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பவுத்த காப்பியம். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியை மணிமேகலையில் காண முடிகிறது.
இரண்டு காப்பியங்களும் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. என்றெல்லாம் பல முக்கியமான செய்திகளைப் பதிவு செய்கிறார் பத்மாவதி விவேகானந்தன்.
– எஸ்.குரு