தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர்.
கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர்.
உறங்கிக் கிடக்கும் தன் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி, முன்னேற்றப் பாதையில் உரிமையுள்ள மக்களாக மாற்றுவதே தலிப் படைப்புகளின் நோக்கமாக உள்ளது.
‘கற்பி – ஒன்று சேர் – கலகம் செய்’ என்னும் அண்ணல் அம்பேத்கரின் முழக்கமே, தலித் படைப்புகளுக்கான உத்வேகமாக இருக்கிறது!
அந்த வகையில் தலித் படைப்பாளிகள் குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நுால் இது.
மூன்றாவது பாலினமாகச் சமூகத்தின் விளிம்பு நிலையில், பாதுகாப்பற்ற வெளிகளில் வசித்து வரும் திருநங்கையர் குறித்த சிந்தனைகளை, ஆசிரியர் பதிவு செய்கிறார்.
கடந்த, 19ம் நுாற்றாண்டின் இறுதியிலும், 20ம் நுாற்றாண்டின் துவக்கத்திலும் சமூக – அரசியல் சீர்த்திருத்தங்களை முன்மொழிந்தவர்களில் தமிழகச் சூழலில், அயோத்திதாச பண்டிதர் முதன்மையானவராக விளங்குகிறார். அவரைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதுகிறார்.
டாக்டர் பீமராவ் அம்பேத்கர், பாபுராவ் பூலே, ரெட்டைமலை சீனிவாசன் போன்ற பல்வேறு அறிஞர்கள், இந்தத் தாழ்ந்த சமூகம் விழிப்புணர்ச்சி பெற, தங்கள் சிந்தனைகளை ஆளும் அரசுக்கு எதிராக தைரியமாய் தடம் பதித்ததையும் பதிவு செய்கிறார்.
தலித்தியம் என்பது ஏதோ ஒரு ஜாதியின் அடையாளமாக மட்டுமே பார்க்கிற அவலம் இங்கு இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட வேண்டி உள்ளது.
ஜாதி வர்க்கங்களைக் கடந்து ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கான ஆயுதமாய், சமத்துவத்துக்கான ஆயுதமாய் தலித்தியம் பின்பற்றப்பட வேண்டும். தலித் அரசியலிலும் இதையே வழி நடத்திச் செல்ல முனைய வேண்டும்.
ஏனெனில், கடந்த காலத்தில் நடந்த சமூக நீதிப் போராட்டங்களில் முக்கியப் பங்கை தலித் மக்கள் ஆற்றியிருப்பதை, நாம் கடந்த கால வரலாறுகள் மூலம் அறியக் காண்கிறோம் என்கிறார், விழி.பா.இதயவேந்தன் என்கிற விமர்சகர்.
பூமணி, சிவகாமி, ரவிக்குமார், ராஜ்கவுதமன், பிரதிபா ஜெயச்சந்திரன், பாமா, சோ.தர்மன், அபிமானி, அழகிய பெரியவன், பாப்லோ அறிவுக்குயில், மதிவண்ணன், என்.டி.ராஜ்குமார் என, பல எழுத்தாளர்கள் தலித்திய கண்ணோட்டத்தோடு எழுதி இருப்பதை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன் நன்றாக ஆய்வு செய்கிறார் விமர்சன இலக்கியம்.
– எஸ்.குரு