தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன் எழுதிய இலவச புத்தகம் இது.
மாணவர்களிடையே 2010ம் ஆண்டு முதல், போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இவரின் முயற்சியால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வடைந்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையே விபத்துக்கு காரணம்.
இதனாலேயே விலை மதிப்பில்லா உயிர்களை இழக்க நேரிடுகிறது. எனவே, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்புத்தகத்திற்கு விலை இல்லை என நுாலாசிரியர் முடிவு செய்து, மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருவது வரவேற்கத்தக்கது.
சிறு சிறு சம்பவங்களாக எளிய நடையில் வார்த்தைகளால் வடிவமைத்து, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் அருமை. இப்புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்து பாராட்டியது தனிச்சிறப்பு.
இந்நுால், 128 பக்கங்கள் கொண்டது. 34 பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பொருளடக்கம் முடிந்த பின் திருக்குறள் போல் இடம் பெற்றுள்ள வாழ்க்கை தத்துவ வார்த்தைகள் சிந்திக்க வைக்கிறது.
– கா.சுப்பிரமணியன்