கார்ல் மார்க்சின் (1818 – 1883) 200வது பிறந்த நாள், 2018, மே, 5ல் வருவதை நினைவுகூரும் வகையிலும், இளம் சந்ததிக்கு அந்த மாமேதை பற்றித் தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலினாலும், எழுதப்பட்டிருப்பதாக நுாலாசிரியர் தெரிவிக்கிறார்.
‘அறிவியல் சார்ந்த சமதர்மத்தை’ வகுத்தவருள் முதன்மையானவராக கருதப்படுபவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றைப் புரட்டிப் போட்ட பெரும் சிந்னையாளர்களில் தலைசிறந்தவராக மதிக்கப்படுபவர்.
வறுமையும் போராட்டங்களும் நிரம்பிய தன் வாழ்வுப் பயணத்தில், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, மனதிலே விடுதலைக்கான தத்துவங்களை உலகுக்கு அறிவித்த மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை மிக உணர்ச்சி பொங்கப் பதிவு செய்திருக்கிறார் நுாலாசிரியர்.
நுாலாசிரியருக்கு மார்க்ஸ் தன் பரந்துபட்ட படிப்பில் திருக்குறளைப் பயிலாமல் இருந்து விட்டாரே என்ற ஆதங்கம் உண்டு.
அதைப் போக்கும் வகையிலோ, என்னவோ மார்க்சின் வரலாற்றை விவரிக்கும் பல அத்தியாயங்களில் பொருத்தமான ஏராளமான திருக்குறள் பாக்களை மேற்கொள்களாகப் பொழிந்து தள்ளியிருக்கிறார்.
படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் நடை. அனைவரும் படித்துச் சிந்திக்க வேண்டிய நுால்.
– மயிலை கேசி