சிவாலயங்களில் இறைபணி ஆற்றும் ஆதி சைவ மரபைப் பற்றிய முழுத் தகவல்களைத் தருகிறது. வரலாற்று அடிப்படையிலும், ஆகம அடிப்படையிலும் பல தகவல்களைத் தரும் இந்நுால், 22 தலைப்புகளில் பல செய்திகளை ஆய்வின் அடிப்படையில் ஆராய்கிறது.
ஆதி சைவர்கள் சைவ இலக்கியங்களிலும், சாத்திரங்களிலும் சுட்டிக் காட்டும் ஆசிரியர், கவுசிகர், காஸ்யபர், பரத்வாஜர், கவுதமர், அகஸ்தியர் ஆகிய ஐந்து முனிவர்களின் வம்சத்தில் வந்தவர்களே ஆதி சைவர்கள் என்று உணர்த்துகிறார். இவர்களே சிவாச்சாரியார்கள்.
சிவபெருமானுக்கு வழி வழியாகப் பூஜை செய்யும் இவ்வேதியர் குலமே ஆதி சைவர் மரபு. இதை நன்கு தெளிவுபடுத்துகிறார் நுாலாசிரியர்.
பக்தி இலக்கியங்களில் குறிக்கப்படும் ஆதி சைவர்கள் இவர்களே. ஆகமங்கள் சிவபெருமானால் அருளப் பெற்றவை என்பதை சுந்தரர் பாடியுள்ள தேவாரத்தில் இருந்து சான்று காட்டுகிறார்.
ஆகம விதிப்படியே பார்வதி சிவபெருமானுக்குப் பூஜை செய்ய ஆசைப்பட்டாள் என்ற கருத்தைத் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில் இருந்து எடுத்துரைக்கிறார்.
பெரிய புராணத்திலும், வேறு சில நுால்களிலும் இச்செய்தி குறிக்கப்படுகிறது. ஆகம விதிகளைப் புறந்தள்ளி இகழ்பவர்களை அரசன் தண்டித்திடல் வேண்டும் என்று திருமூலர் குறித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
கோவில் பற்றி அனைத்துத் தகவல்களும், செய்திகளும் ஆகமங்களில் மட்டுமே உள்ளன. கோவிலுக்கு நிலம் தெரிவு செய்வது முதலாகக் குடமுழுக்கு ஈறாக அனைத்தும் ஆகம விதிகள் படியே செய்யப்பட வேண்டும்.
ஆதி சைவர்களாகிய சிவாச்சாரியார்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இரு விதத்திலும் சிவபெருமானைப் பூசிக்கும் உரிமை பெற்றோர் என்று சுட்டிக்காட்டுகிறார்.
வேதத்திற்கு முன்னுரிமை கொடுப்போர் பிராமணர்கள் என்றும், ஆகமத்திற்கு முன்னுரிமை கொடுப்போர் சிவாச்சாரியார் என்றும் உணர்த்துகிறார்.
பிராமணர்கள் வேறு, சிவாச்சாரியார்கள் வேறு; பிராமணர்களுக்கு சன்யாச ஆஸ்ரமம் உண்டு என்றும், சிவாச்சாரியார்களுக்கு அப்படி விதிக்கப்படவில்லை என்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார்.
ஆதி சைவர்களை அய்யர் என்று அழைக்கும் வழக்கம் கிடையாது என்று சுட்டி விட்டு, ‘வேறு தேச மன்னர்கள் காலத்தில், பூணுால் அணிந்த அனைவரையுமே அய்யர் என்று அழைப்பது வழக்கமாகி விட்டது.
இதன் காரணத்தால் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் தங்கள் தனித் தன்மையை, தனித்துவத்தை, சமுதாய மரியாதை இழந்தது துயரமானது’ என்று எழுதிச் செல்வது நுாலாசிரியரின் ஆதங்கத்தைக் காட்டுகிறது.
ஆதி சைவர்கள் தமிழர்களே என்ற கருத்தைப் பதிவு செய்துள்ள ஆசிரியர், அதற்கான எடுத்துக்காட்டுகளை முறைப்படி உரைக்கிறார்.
ஆதி சைவர்களின் தமிழ், வடமொழித் தொண்டுகள், மன்னர்களுக்கு அவர்கள் ராஜ குருவாக இருந்தமை, ஆதி சைவ அருளாளர்கள், இடைக்காலத்தில் ஆதி சைவர்களின் நிலை என்பன போன்ற செய்திகளை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைத்திருப்பது பாராட்டுக்குரியது.
–ராம.குருநாதன்