ஒவ்வொரு வருடமும் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே, ஒரு மாணவனுக்கு சமூக மதிப்பீடு வழங்கப்படுவதைக் காண்கிறோம்.
அந்த மதிப்பெண்களே அடுத்த வருட மேற்படிப்புக்கு அடித்தளமாகவும், அளவீடாகவும் அமைந்து விடுகின்றன. கல்லுாரி அல்லது பல்கலைக்கழகங்களில் பெறும் மதிப்பெண்கள், வேலைவாய்ப்பில் உறுதுணையாக வருகின்றன.
படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், வகுப்பறைப் பாடங்களைக் கற்பதிலும், தேர்வு எழுதுவதிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு பதற்றம் இருக்கிறது.
நன்றாக படிக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வு கொண்ட மாணவர்கள்கூட வகுப்பறைப் புரிதலில் பலவீனமாக இருப்பதாலும், தேர்வை எப்போதுமே உளைச்சலோடு எதிர் கொள்வதாலும் நினைத்த அளவில் மதிப்பெண்கள் பெறமுடியாமல் தடுமாறி விடுகின்றனர்.
தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தி, தேர்வுக்குத் தயார் செய்யும் முறைகள், தேர்வு குறித்த நேர்மறையான அணுகுமுறைகள்...
அட்டவணை தயாரித்து அதைப் பின்பற்றி பாடங்களைப் பயிலுதல், தைரியமாகத் தேர்வு எழுதுதல், ஒரு தேர்வுக்குப்பின் அடுத்த தேர்வுக்கு தயாராகுதல் போன்ற வழிமுறைகளைக் கூறுகிறது இந்நுால்.
ஆர்வத்துடன் கல்வி கற்பதற்குத் தேவையான தன்விருப்ப மனோநிலை, மனப்பாடம் செய்வதால் உள்ள பலன்கள், காலத்தின் அருமை உணர்ந்து படித்தல் ஆகியவை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மன உறுதி, கடின உழைப்பு, நற்பண்புகள், விடாமுயற்சியால் மட்டுமே நினைத்தவை கைகூடும் என்பதும், பாடப் புத்தகங்களுக்கும் அப்பாற்பட்ட நுால் வாசிப்புகள் மனச்செழுமை கூட்டுகின்றன என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் பள்ளித் தேர்வுகளை அணுகும் மாணவர்களுக்குத் தெளிவு தரும் ஒரு வழிகாட்டு நுால்.
–மெய்ஞானி பிரபாகரபாபு