மரபுக்கவிதை நுால்கள் அருகிவரும் காலத்தில் ஒரு புதிய மரபுக்கவிதை நுால் வானவில். புதிய மரபுக் கவிதை எனில் யாப்புநெறிகளைப் பின்பற்றி பல்வகைப் பாக்களை படைத்துள்ள ஆசிரியர் மரபுமீறல்களும் செய்துள்ளார்.
வானவில்லின் ஏழுவண்ணமும் கலந்தாற்போல் பல்வேறு துறைகள், பல்வேறு தலைப்புகளில், 300 பக்க கனமான, நுாலைத்தந்துள்ளார் நுாலாசிரியர்சக்தி. சிவசுப்பிரமணியன், சித்தார்த்தன் ஆகி, பின் சக்தியாகியுள்ளார்.
நுாலாசிரியர் தொலைபேசித்துறைப் பொறியாளர். நாடகங்கள் பல, கட்டுரை நுால்கள் பலற்றிலும் கால் வைத்துள்ளவர். இசையறிவும் உடையவர்.
கலை இலக்கியப் பெருமன்ற ஈடுபாடு உற்றவர். வானவில்லில் ஏழு நிறம் என்றாலும் இவர் நான்கு பெரும் பகுதிகளாக நுாலைப் பகுத்துள்ளார்.
அவை: அறிவியல், அழகியல், சமுதாயவியல், அரசியல். இந்த நான்கில் ஞாலமே அடங்குமன்றோ! சில நிகழ்வுகளைக் கவிதையாக்கியுள்ளார். நிலாவுக்குப் போகலாம் என்று குழந்தைகளுக்கும் பாடியுள்ளார்.
விஞ்ஞான நான்மணிமாலை என்றொரு நுால். எப்படி இணைப்பு? கூட்டை விட்டு வெளியே வா என்றவர், வையகத்தில் உனக்கென்று வைத்தபணி எத்தனையோ கையகலக் கூட்டினுள்ளே கண்முடி வாடுவதேன்? என ஊக்கமூட்டுகிறார்.
கவியரங்கக் கவிதைகளும் உண்டு. ‘மூலை இயங்கவில்லை ‘மூடு’ம் பிறக்கவில்லை; ‘கட்டைஉடைத்தெறிவோம், கவிதையை விடுவிப்போம்.’ ‘இலக்கண விதிகளாம் விளக்கெண்ணெய்’ வேண்டுமென்றால் யாப்பு, வேண்டாமெனில், விளக்கெண்ணெய்.
நன்று நன்று. விருத்தங்களில் யாப்பு வாய்பாடு மீறிச்செல்லுகிறார். நான்கடிகளை எட்டு வரிகளாகப் பிரித்து எழுதுவோம்.
இவரது விருத்தங்களில் பத்து வரி (ஐந்தடி) ஒன்பது வரி, ஆறு வரி (மூன்றடிகள்) எல்லாம் உண்டு. கவிஞர்கள்பாடத் தவறாத, இயற்கையும் காதலும் இந்நுாலில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பலரும் பாடாத பலபொருள் பாடியுள்ளார்.படித்துப் பாருங்கள்.
– கவிக்கோ ஞானச்செல்வன்