தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பெறும் சைவ – வைணவ கோவில்கள், அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிட்டு, வழிபாட்டு முறைகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர்.
விநாயகர் வரலாறு என்ற தலைப்பில், விநாயகர் வழிபாடு, 6 – 7ம் நுாற்றாண்டில் தான் தமிழகத்தில் பரவியது என்றும், விநாயகரும் விஷ்வக்சேனரும் ஒருவரே என்பது போலவும் எழுதியுள்ளார்.
சோழர்கள், பாண்டியர்கள் கட்டிய கோவில்களைக் குறிப்பிட்டு, தஞ்சையின் சாசனக் குறிப்புகளும் எழுதப் பெற்றுள்ளன.
குற்றாலத்தில் இருந்த திருமால் கோவில், பின்னர் சிவன் கோவிலாக மாறியது என்பதும், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலும், திருப்பதி திருவேங்கடவன் கோவிலும், அழகர் கோவிலும் முற்காலத்தில் சிவன் கோவில்களாகவே இருந்தன என்பதும் நுாலாசிரியர் கருத்து. இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா அல்லது செவி வழிச் செய்திகளா என்று குறிப்பிடப்படவில்லை.
புராணங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, சைவத் திருமுறைகளின் பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளார். சைவ சமயக் குரவர்கள் நால்வர் பாடிய தேவார, திருவாசகங்களில் சிற்சில அடிகளைக் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்புப் பற்றி சில வரிகள் எழுதப் பெற்றுள்ளன.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். உருவ வழிபாடு, சாத்திர வழிபாடு, அருவ வழிபாடு என வழிபாட்டு வகைகளைச் சுட்டியுள்ளார்.
பூஜை பொருட்களின் பெயர் பட்டியலையும் தந்துள்ளார். சரியை, கிரியை, யோகம் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பேரூர் பட்டீச்சுரர் கோவில் பூஜை நேரங்கள், விழாக்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
பின் இணைப்புப் பகுதியில் ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை அச்சாகியுள்ளன. அவற்றிற்கு எண்களும் இடாமல், ஒரு பாடல் அடுத்த பாடலுடன் கலந்து அச்சாகிஉள்ளன.
திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள் சில உள்ளன. இறுதியில் ராமானுஜர் நுாற்றந்தாதியில் சில பாடல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன.
நுாலாசிரியர் தன், 80ம் வயதில் இதை வெளியிட்டுள்ள ஆர்வத்தைப் பாராட்டலாம்.
– புலவர் ம.நா.சந்தானகிருஷ்ணன்