‘அன்பினுக்கு ஓர் கோவிலாய், எமதுயிர் நாடாம் பயிருக்கு மழையாய் வாழ்ந்த அன்னை’ என்று, பாரதியார் புகழ்ந்த சகோதரி நிவேதிதையின் 151ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் வெளியாகி உள்ள சிறந்த நுால்.
குருநாதர் விவேகானந்தர் காட்டிய ஆன்மிப் பாதையில் வாழ்ந்த இவரை ஐரோப்பியப் பெண் என்பது மடமை. தியாகமும், தொண்டும் லட்சியமாகக் கொண்டவர்.
அதன் அடையாளமாக நிவேதிதை அன்னையின் பெருமை, புனிதம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வஜ்ராயுதம் பொறித்த இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர்.
இவர், 1906ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியில் உட்பிளவு ஏற்பட்டதை ஏற்கவில்லை. மகான் அரவிந்தர், திலகர் ஆகியோர் அன்றே கட்சியின் பாதையை தவறு என்றனர்.
உள்கட்சிப் பிளவு தேசியவாதிகளுக்குள் வரலாமா என்று வேதனைப்பட்ட அவர், அதற்குப் பின் காங்கிரஸ் கூட்டங்களை ஒதுக்கினார்.
லண்டனுக்கு சுவாமி விவேகானந்தர் பயணமும், அதில் அவர் ஆற்றிய நம்பிக்கை உரையும், ‘சிவ’ கோஷமும், மிஸ் மார்கரெட் என்ற கல்விப் பணியாற்றிய பெண்ணுக்கு, வாழ்வைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு, அவர் நிவேதிதை ஆக உதவியது.
‘இந்திய பெண்களிடம் பணியாற்ற ஆண் போதாது; பெண் சிங்கம் தேவை’ என்ற சுவாமியின் கருத்து, அவரை தவ மங்கையாக்கியது என்ற தகவல், படிப்போரது நெஞ்சத்தை தொடும்.
விலை போகிற மனிதர்கள், பணம் வாங்கும் ஒற்றர்கள் இந்தியாவுக்கு தேவையில்லை. ஆணிவேருக்கு சென்று ஆராய்கிற ஒரே மனிதராக சுவாமிஜி ராமகிருஷ்ண பரமஹம்சர் மட்டுமே தெரிகிறார் என்பது அவர் காட்டிய நெறி.
விவேகானந்தர் காட்டிய பாதையில் ராமகிருஷ்ண மடத்தின் பணிகளை விரிவாக்கியதில் இவரது பங்கினை இப்புத்தகம் அழகாக விவரிக்கிறது.
விவேகானந்தர் தமிழகத்தின் பெருமையில் ஈர்ப்புண்டதுபோல, இவரும் லயித்தவர். சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கண்ட பின், ‘கோவில் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கையில் ஊடுருவ வேண்டும்’ என்ற கருத்தும், காஞ்சி பச்சையப்பர் கல்லுாரி அரங்கில், ஆங்கிலேயர் வந்து இந்தியாவுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுத்தனர் என்பது தவறு.
‘இந்தியாவில் ஏற்கனவே பலத்த ஆற்றல் மிக்க ஒருமைப்பாடு உள்ளது; அது, மற்றவர் தந்த கொடையல்ல’ போன்ற ஏராளமான உண்மைகள் இந்த நுாலில் உள்ளன.
அன்னை சாரதா தேவியிடம் அவர் கொண்டிருந்த அன்பு, ‘உண்மையற்றதில் இருந்து எங்களை உண்மைக்கு அழைத்து செல்வாயாக’ என்ற பிரகதாரண்ய உபநிஷத் வாசகத்துடன், ருத்ர வணக்கம் செய்த நிவேதிதை சிறப்பை அறிய விரும்புவோர், இந்த நுாலை வாங்கிப் படிக்க வேண்டும்.
குறிப்பாக, பெண்கள் முன்னேற்றம் என்பதை, உயரிய மங்கையான நிவேதிதை அணுகிய முறை இன்றும் அப்படி யே பொருந்தும்.
– எம்.ஆர்.ஆர்.,