கருவில் பெண் சிசுக் கொலைகள் துவங்கி, வளர் இளம் பருவத்தில் பெண்களின் அறியாமைச் சூழல்கள், உடல் மற்றும் மன வளர்ச்சிகள், பெண்களுக்குக் கவர்ச்சி மீதான நாட்டங்கள்...
அறியாப் பருவச் சூழல்கள், வளர வளர பெற்றோரை விட்டு மனதளவில் விலகும் மனோநிலை, நாகரிக மாற்றங்கள், மண வாழ்க்கை, முதிர்நிலை...
பெண்களின் ஆற்றல்கள், பெருமைகள் இவற்றினுாடே வாழ்நாளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைக் கட்டுரைகளாக்கிப் படைக்கப்பட்ட நுால்.
ஆண், பெண் விகிதாசாரத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் புள்ளி விபரங்களோடு கூறப்பட்டிருக்கிறது.
பெண்களின் தாழ்வுக்குக் காரணிகளான சமுதாயப் பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள், பெண்களின் மீதான சமூக மதிப்பீடுகள், சமுதாயக் கட்டுப்பாடுகள், மாறி வரும் மனோநிலைகள், பெண்களைச் சித்தரிப்பதில் ஊடகங்களின் பங்கு எனப் பலவற்றையும் ஆசிரியர் முன்வைக்கிறார்.
பெண்களுக்கு கொடுமைகள் செய்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்வதும், பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் இந்தச் சமுதாயத்திற்கு நியாயமாகத் தெரிவதாக சாடுகிறார்.
ஆண், பெண் விகிதாசாரத்தைச் சமன்படுத்த திடமான சமூகத் தீர்வுகள் என்னென்ன என்பதையும், கிராமங்களில் வாடும் எண்ணற்ற ஏழைப்பெண்களின் வாழ்க்கை வலிகளையும், நிவாரணங்களையும் விரிவாக விவாதித்திருக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு