சுயநலம் வாழ்க்கையாகி, ஒழுக்கக் கேடுகளே செய்தியாகி, தீமைகளே தினமும் உலா வரக் கூடிய காலம். இன்றைய இருளைப் போக்க, நம்பிக்கை ஒளி தரும் நுாலாக பெரியவர் வாழ்வும் செய்தியும். இந்த நுால் எதிர்கால இளைஞருக்கு சிறந்த கையேடு.
புத்தர், காந்தி, சங்கரர், வள்ளலார், ரமணர் போன்ற ஞானிகளின் வரலாறை உதாரணமாகக் காட்டியுள்ளார்.
ஷேக்ஸ்பியர், ஜி.டி.நாயுடு, காமராஜர், லால்பகதுார் சாஸ்திரி போன்ற அறிஞர்களின் சாதனைகளைப் பேசியுள்ளார்.
மொத்தம், 96 தலைப்புகளில் சிந்தனைகள் பரிமாறப்பட்டுள்ளன. சிந்தனையாளரின் வாழ்வுச் சம்பவங்களைப் படித்ததும் அது மனதைப் பற்றிக் கொள்கிறது; அவரது படமும் கண்ணில் பதிந்து விடுகிறது.
மகாத்மா காந்தி, 1938ல், ரமண பகவானிடம், பாபு ராஜேந்திர பிரசாத்தை அனுப்பினார் முடிவில், ‘காந்திக்கு ஏதேனும் செய்தி உண்டா?’ என்றார். ‘அவரை அங்கு இயக்கும் சக்தியே இங்கு என்னையும் இயக்குகிறது. இதயம் இதயத்துடன் பேச வாய் எதற்கு?’ என்றார் (பக். 47).
உ.வே.சாமிநாத அய்யருக்கு, பாண்டித்துரைத் தேவர் ஒரு கிராமத்தையே வழங்கினார்; அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். நேர்மையின் இலக்கணம் ராஜாஜி, பூமி தானம் வினோபாஜி, ஜாதியை ஒழித்த ராமானுஜர், நீதியின் இலக்கணம் வேதநாயகம் பிள்ளை, எளிமையின் சாதனை ஜீவா, பாஞ்சாலி சபதம் பாரதியார் என்று துவங்கி, சாக்ரடீஸ் வரை யாவரையும் நம் கண் முன் நிறுத்தி மனதில் பதிய வைக்கிறது இந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்