மூத்த பத்திரிகையாளருள் ஒருவரான எஸ்.திருமலை, தீபம் ஆசிரியராகத் திகழ்ந்த, நா.பார்த்தசாரதியோடு தொடர்புடைய, 10 பேரைப் பற்றிய செய்திகளை ஒரு பகுதியாகவும், வல்லிக்கண்ணனோடு தொடர்புடையோரைத் தனிப் பகுதியாகவும் அமைத்து இந்நுாலை உருவாக்கிஉள்ளார்.
தீபம் திருமலையின் அனுபவங்களை நினைவலைகளாகக் கூறிச் செல்கிறது இந்நுால். தி.க.சி., வே.சபாநாயகம், இளம்பாரதி, கல்பனா தாசன், தேவி மைந்தன் முதலியோர் நா.பா.,விடம் கொண்டிருந்த தொடர்பை விளக்குகிறார் நுாலாசிரியர்.
அது போன்றே வல்லிக்கண்ணனிடம் தொடர்பு கொண்டிருந்த குரு.ராதாகிருஷ்ணன், வண்ணதாசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, முகம் மாமணி முதலானோரின் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தீபம் இதழ் புதுமையாக வர வேண்டும் என்பதில் நா.பா., காட்டிய தீவிரத்தை தி.க.சி., எடுத்துரைக்கிறார். தமிழ் இதழியல் உலகில் தீபம் முத்திரை பதித்தது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் சபாநாயகம்.
தீபம் தொகுப்பை இரு தொகுதிகளாகக் கொண்டு வந்ததைக் குறித்துள்ளார் சபாநாயகம். ஆனந்த போதினியில் நா.பா., சங்கத் தமிழை நடைமுறைத் தமிழாக ஆக்கிய திறத்தை இளம்பாரதி பதிவு செய்கிறார்.
டாக்டர் கைலாசம், நா.பா.,வின், ‘குறிஞ்சி மலர்’ குறித்து காவிய அளவுக்குப் பாராட்டியிருப்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. அவரது பிற நாவல்கள் பற்றியும் கருத்துத் தெரிவித்திருப்பதை எடுத்துரைத்துள்ளார், திருமலை.
கல்கியில் இருந்து விலகிய நிலையில், நா.பா., அது குறித்து, தாமரையில் எழுதியதைக் கோடு காட்டிச் செல்லும், கல்பனா தாசன், எழுத்தாளர் பலரும் தீபத்தோடு தொடர்பு கொள்வதை ஒரு பேறாகக் கருதியிருந்ததோடு, ஊதியமோ, சன்மானமோ எதிர்பார்க்காது விசய தானம் அளித்ததைப் பதிவு செய்துள்ளார்.
நா.பா.,வின் மகன், நாராயணன் தந்துள்ள தகவல் சுவையானது. நா.பா., தன் வேலை நீக்கம் குறித்து, தாமரையில் வெளிவந்த கட்டுரையையும், திருமலை இதில் சேர்த்துள்ளார்.
வல்லிக்கண்ணன் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்நுாலில் நுாலாசிரியர், வல்லிக்கண்ணனோடு பயணித்த அனுபவங்களை ஒன்று விடாமல் சுவைபட எழுதியுள்ளார். வல்லிக்கண்ணனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துரைத்துள்ளார் குரு.ராதாகிருஷ்ணன்.
வல்லிக்கண்ணனின் தோற்றத்தையும், பக்குவமாக அவர் எழுதிய கைகளையும் நடைச் சித்திரமாகக் காட்டியுள்ளார் வண்ணதாசன். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, ராசாமணி ஆகியோர் எழுதிய சிறு கட்டுரைகள் நோக்குவதற்குரியவை.
ஸரத்கமலன் எழுதிய வல்லிக்கண்ணன் பற்றிய நீண்ட கட்டுரை, வல்லிக்கண்ணனின் வாழ்க்கையைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
– ராம.குருநாதன்