ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக அப்படைப்பாளியின் வரைபடம் ஒன்று புலனாகும்.
முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியத்தின் கதைக்களத்தில் உலா வரும் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை பலவகையிலும் ஆய்ந்து, அவரை ஒரு வாழ்வியல் படைப்பாளியாக நிலை நிறுத்துகிறார் முனைவர் தமிழரசி.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் கதை மாந்தர்களிடையே வெளிப்படும் எதிர்பார்ப்பற்ற மனிதநேயம், பயன் பெற்றதும் நன்றி மறத்தல், நெருக்கடியிலும் சுயநலம், துன்பத்திலிருந்து மீட்கும் நம்பிக்கைகள், துன்புறுத்தும் ஆற்றாமை, தளரவைக்கும் தாழ்வு மனப்பான்மை, கல்லாமையின் வடுக்கள் போன்ற பல்வேறு வாழ்வியல் சார்ந்த மனோநிலைகள் ஆய்வுக்குட்படுகின்றன.
காவல் துறையின் அவலநிலை, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம் போன்றவற்றின் பிரதிபலிப்புகளும் விளக்கமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் துயரங்கள், பாலியல் பாதிப்புகள், மனநிலைத் தடுமாற்றங்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் கதைகளும் ஆழ்ந்து சுப்ரபாரதிமணியனை சமூக நோக்குள்ள சிறந்த படைப்பாளியாகவும், பொறுப்புள்ள ஒரு சுற்றுச் சூழல்வாதியாகவும் காட்டப்படும் முறை சிறப்பானது.