ஐ.நா., சபை வரை முறையிட்டும், இன்னமும் முழுமையான தீர்வு கிடைக்காமல் இருக்கும், இலங்கை இனப்பிரச்னையை ஒட்டி, பல்வேறுபட்ட சொந்த கருத்து திணிப்புகளோடும், உணர்வுபூர்வமாகமும், நிறைய நுால்கள் வந்துவிட்டன; இன்னமும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இவற்றின் இடையே, 1987-ல், இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றி, இலங்கை இனப்பிரச்னை யின் பல்வேறு நிகழ்வுகளோடு, நுாலாசிரியர், விளக்குகிறார்.
கடந்த, 1987 மே மாத, யாழ்ப்பாண வெயிலில், யுத்த களத்தின் சூட்டோடு ஆரம்பிக்கும் நுால், சமீபத்திய சிறிசேனாவின், இனப்பிரச்னை தீர்விற்கு, 12 முறை, அவர் வடக்கு மாகாணத்திற்கு
பயணம் செய்த ஆக்கபூர்வ முயற்சி வரை விபரமாக, நுாலின் இறுதி வரை, ஆரம்ப யுத்த சூடு குறையாமல், அதே சமயம் பரபரப்பின்றி நுால் அமைந்துள்ளது.
எந்த இனப்பிரச்னையிலும், மிக பெரிய இழப்பு, பல்வேறுபட்ட மரணங்கள் தான்.
இலங்கை இனப்பிரச்னையையொட்டி நடந்த பல கொலைகள், எதிர் வினையாய் தொடர் கொலைகள், தமிழர்கள் தங்களுக்கு தாங்களே, மரண குழி வெட்டிக்கொண்ட கொடுமை, பெண் துறவியர் உட்பட சிங்கள சமூகத்தினர் படுகொலை என, பல நிகழ்வுகளை, நுாலாசிரியர் விவரித்திருக்கிறார்.
இலங்கை இனப்பிரச்சனை நிகழ்வுகளை எந்த வித சார்புமின்றி, ஆசிரியர் தானே கண்ட நேர்காணல்கள், பிற ஊடக உண்மை தகவல்களை திரட்டி தந்திருக்கிறார்.
எந்தவித அனுமானங்கள், சொந்த கருத்து திணிப்புகள் இன்றி, உள்ளதை உள்ளவாறே உரைக்கும் நுால்.
– திருவருணை சிவசு