இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர்.
அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட புதினம் இது.
கொங்கு நாட்டை மண்ணின் மைந்தன் தான் ஆள வேண்டும் என்று ஓங்கி முழங்கி, கொங்கு மண்ணின், 24 மண்டலங்களை ஒன்றிணைத்து நாடாக்கும் எண்ணம் ஏற்பட்டது.
மைசூர் மன்னன் ஹைதர் அலியின் ஆதிக்கத்தை எதிர்த்து, 1782ல் வெள்ளையர்களால் ஹைதர் அலி கொல்லப்பட்ட பின், திப்பு சுல்தானுடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்து, கொங்கு நிலத்தைத் தனி நாடாக்கி ஆண்டு, துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு துாக்கிலிடப்பட்ட தீர்த்தகிரி எனும் சின்னமலையின் வரலாறு விளக்கமாக உள்ளது.
இந்திய நாட்டு வளங்களை பல வகையிலும் சுரண்டி, இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்ற வெள்ளையருக்கு மண்டியிடாமல், மானம் பெரிதென்று தேச விடுதலைக்காகப் போராடிய சின்னமலை, மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல.
கோட்டையோ, தலைநகரோ, படைகளோ இல்லாமலே கொங்கு மக்களின் தலைவனாக உயர்ந்து, தேர்ந்த ஆளுமையும், ஆட்சி நிர்வாகத் திறனும் கொண்ட திப்பு சுல்தானின் நம்பிக்கைக்கு ஆளாகும் சின்னமலையின் போர் திறன்கள் போன்றவை விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
புதினத்தின் இறுதிக்கட்டத்தில் வருணனைகளும், விவரிப்புகளும் உணர்வுபூர்வமானவை.
– மெய்ஞானி பிரபாகரபாபு