குரு, லிங்க, சங்கம வழிபாடுகளில் அடியார் பெருமக்களை நேசித்துப் பூசித்தலைச் சங்கம வழிபாடு என்பர். அவ்வழிபாட்டுக்குரிய நாயன்மார்களின் அருள் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என, திருப்பேரிட்டுத் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்தமை நம் திருப்பேறேயாகும்.
ஏதேனும் ஓர் உத்தியைக் கையாண்டு இளந்தலைமுறையினரும் அவ்வவதாரிகைகள், அருளாளர்கள் வரலாற்றைப் படித்துய்ய வேண்டும் எனக் கருதிப் போலும், ப.ஜெயக்குமார் ஓரெழுத்தில் ஓரடியார் வரலாறு கூறல் என்னும் அலங்கார உத்தியைக் கையாண்டு, இந்நுாலை யாத்துள்ளார்.
அதற்காக அடியார்களின் திருப்பெயர்களை அகர நிரல் செய்து கொண்டார்.
அகர எழுத்தில் நான்கு நாயன்மார்கள். அந்நால்வரில் மூவரின் வரலாற்றைக் கூறும் அனைத்து அடிகளும், வரிகளும், ‘அ’ என்றே துவங்கும். அதிபத்த நாயனாரின் வரலாறு கூறும் அடிகளின் துவக்கம் யாவும், ‘ஆ’ என்ற துவங்கும்.
அதாவது அகரத்துக்கு ஆகாரம் கொடுத்துள்ளார். இது குற்றமன்று. முதலடியின் முதலெழுத்து எதுவோ அதுவே அனைத்து அடிகளின் முதலெழுத்தாக அமைவதே இவ்வலங்காரத்தின் நியதி எனக் கொள்க.
ஐயடிகள் காடவர்கோன் வரலாற்றை, ‘கா’ என்ற எழுத்தில் துவங்கி, அனைத்து அடிகளையும் அவ்வாறே அமைத்ததை இரண்டாம் சொல்லின் முதலெழுத்தில் துவங்கினார் எனக் கொள்க.
திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பெயரில், ‘தி’ என்ற எழுத்து முதலெழுத்து. அவ்வாசாரியருக்குத் திருஞானசம்பந்த சுவாமிகள், ‘அப்பர்’ என்னும் திருப்பெயரைச் சூட்டி அழைத்தமை கருதி, அவர் வரலாற்றை அகர முதலாகக் கொண்டெழுதினார்.
திருநாளைப் போவார்க்கு நந்தனார் என்னும் திருப்பெயரும் உள்ளமை கருதி நகர முதலாக வரலாற்றடிகளை அமைத்துள்ளார்.
திருநாவுக்கரசர் வரலாற்றை அப்பர் என்று கொண்டு அகரத்தில் அனைத்து அடிகளையும் யாத்த இவர், அவரை அகர நிரல்படி முதலிலேயே அமைத்து இருக்கலாமே!
சிறுத்தொண்டர் வரலாறு, இசைஞானியார் வரலாறு முதலிய பல இடங்களில் தெய்வச் சேக்கிழார் உள்ளிட்டோரின் அருட்பனுவல்களை அகர நிரலுக்கு அப்பாற்பட்டு மேற்கோள் காட்டியது, இவரின் சமய இலக்கிய அறிவையும், பக்தியையும் மெய்ப்பிக்கிறது.
அற்புதமான செய்திகள் அடங்கிய அணிந்துரை பெற்றுள்ளது இந்நுால். அவ்வணிந்துரை இந்நுாலுக்கு அமைந்த மணிமுடி.
மொத்தத்தில் இளைய தலைமுறையினரை பக்தி வலையில் படுப்பித்து நன்னெறிச் செலுத்தும் இந்நுால் நன்னுாலே என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
– ம.வே.பசுபதி