தாம் கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்த்து, நெகிழ்வான தருணங்களை சுயசரிதமாகப் பதிவு செய்ய விரும்புபவர் பலர். உணர்வு மயமான அறியாப் பருவ பள்ளிக் காலங்கள், இளமை துள்ளும் வாலிபக் கோலங்கள், இல்லற நாட்கள் எனப் பல காட்சிகளும் மனத்திரைக்கு வந்து வந்து மலைக்க வைக்கும்.
அந்த வகையில், வாழ்க்கைப் பாதையில் தான் கடந்து வந்த அன்பிற்கும், நேசத்திற்கும் உரிய நண்பர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், திரையுலக விற்பன்னர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோரின் நற்பண்புகளையும், தன்னை அன்போடு ஆதரித்தவர்களுடனான நெகிழ்ச்சியான அனுபவங்களையும் ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.
தன்னை நெருக்கமாக ஏற்றுக்கொண்ட திரையுலகப் பிதாமகர் டி.இராமானுஜம், அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் அரவணைத்த ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத் தலைவர் ஜி.ராமானுஜம் போன்றோர் மீது கொண்ட உள்ளார்ந்த மதிப்பை வெளிப்படுத்தி, தொழிற்சங்கத்தின் வாயிலாக பிரதமர் இந்திராவை சந்தித்ததை பெருமையாகக் கூறுகிறார்.
தமிழகக் காவல் துறை அமைச்சராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற உன்னத மனிதர் கக்கன், அடுத்த நாளில் இருந்து பொதுப் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னோடு உரையாடியதைக் கூறி மனம் நெகிழ்கிறார்.
பணியாற்றியது கன ரகத் தொழிற்சாலை என்றாலும், நுாலெங்கிலும் ஒரு புகைப்படக் கலைஞரின் மென்மையான உணர்வோட்டம் புலப்படுகிறது.