‘காகதிய பேரரசு – தெலங்கானா மன்னர்களின் வீர வரலாறு’ என்னும் இந்நுாலில், 10 இயல்களின் வாயிலாக செய்திகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இயல் ஒன்றில், ஒரு கல்லுா நகரை தலைநகராகக் கொண்டு, தெலங்கானா உள்ளடங்கிய ஆந்திர தேசத்தை, கி.பி., 1150 முதல், 1323 வரை சிறப்பாக ஆட்சி செய்தோர் காகதியர்கள்.
காகதிருத்ர தேவா வெளியிட்ட அனுமகொண்டா கல்வெட்டுகளையும், பட்டயங்களையும் முழுமையாக ஆராய்ச்சி செய்து, கி.பி., 1882ல் வெளியிட்டவர் ஜெ.எப்.பீளிட் என்ற ஆங்கிலேயர்.
அப்போதைய ஆந்திர அரசு, தொல்லியல் துறை மூலம் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வாரங்கல், கரீம் நகர் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் கல்வெட்டுகள், செப்பு பட்டயங்களை ஆராய்ச்சி செய்து, பல்வேறு புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்தது. இதன் மூலம் காகதிய பேரரசைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தன.
காகதிய கடைசி மன்னன் பிரதாபருத்ராவின் அவையில், கவிஞராக இருந்த வித்யநாதா என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய அணி இலக்கண நுால் பிரதாப ருத்ரியம்.
இயல் மூன்றில் புரோலாவின் முடியுரிமைப் போராட்டம் மிகவும் தீவிரமானது. ஆறாம் விக்கிரமாதித்தன் துணை இல்லாவிட்டால், கி.பி., 1116ல் அவன் பட்டம் சூட்டியிருக்க முடியாது என்பன போன்ற செய்திகள் தரப்பட்டு உள்ளன.
இயல் ஐந்தில், காகதியர் எப்போதுமே, தன் அதிகாரத்தை மற்ற சிற்றரசர்கள் மீது திணிக்க விரும்பவில்லை. அவர்கள் எப்போதுமே, ‘மகாராஜாதிராஜா பரமேஸ்வரா’ போன்ற சிறப்புப் பெயர்களை பயன்படுத்தவில்லை என்பதைக் குறிப்பிடுகிறது.
இயல் ஏழில், காகதியர்களின் வேளாண்மைப் பற்றி, கடலோர ஆந்திரா ஒரு சமவெளிப் பகுதி. ஆனால், தெலங்கானா புதர் காடுகள் நிறைந்த கரடு முரடான பகுதி. இதை மக்கள் பயன்படுத்தி விவசாய பூமியாக மாற்றினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் காகதியர் ஆண்ட, 250 ஆண்டுகளும், தெலங்கானாவின் பொற்காலம் தான் என்றால் அது மிகை ஆகாது. கால்நடை மருத்துவப் பட்டதாரியான முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், தேசமே தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான வரலாற்று நுாலை படைத்துள்ளார்.
– முனைவர் க.சங்கர்