பிறந்தது முதல் இறுதி வரை, பருவ காலங்கள் பலவும் கடந்து செல்லும் வளமையான இந்த வாழ்க்கைப் பயணத்தில், உள்ளதையெல்லாம் துறந்து உலகெல்லாம் கால்நடையாகவே மெய்வருந்திப் பயணித்து பல்வேறு பண்பாடுகளையும், மக்களின் பாடுகளையும் உணர்ந்ததால் தான் பல தீர்க்கதரிசிகளும், சீர்திருத்தவாதிகளும் தோன்றினர்.
பண்டைய காலந்தொட்டு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பயணித்தவர்களே, அழியாத மொழி, கலாசாரம் மற்றும் சமூகப் பங்களிப்புகளைச் செய்து இருக்கின்றனர்.
ஆதிகால மனிதன் தன் தேவைகளுக்காகவும், தட்ப வெப்பத்துக்கேற்பவும் இடம் பெயர்ந்தபடி நாகரிகத்தால் வளர்ந்தான். இன்றைய அளவிலும், ஓயாத பயணம் தான் ஒரு மனிதனை உயர் தளத்துக்கு இட்டுச் செல்கிறது. உலக மக்களை முழுதும் அறியாமல் மேதைகளோ, மேன்மையானவர்களோ வர முடியாது.
ஒரே ஊரில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு மனிதனை அசையாப்பொருள் போலாக்கும் என்பதை உணர்த்தி, உயர்ந்த நோக்கோடு ஊருலகத்தைச் சுற்றியவர்கள் மட்டுமே, மானுடத்திற்கு நன்மை புரிந்திருக்கின்றனர் என்பதை பல நுாற்றாண்டு வரலாற்றுத் தகவல்களோடு முன்வைக்கும் மாறுபட்ட நுால் இது.
பயண இலக்கியங்களுக்காக பத்மபூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற மூல நுாலாசிரியர், பன்மொழியாளர் ராகுல் சாங்கிருத்யாயனின் நுாலை எளிய தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ஏ.ஜி.எத்திராஜுலு.
ஆசைகளைத் துறந்து காடு மேடுகளில் மக்களை நோக்கிக் காலமெல்லாம் பயணித்த புத்தரின் தெய்வீகம், கையில் கவளமும் மரத்தடி வாசமுமாக அனைத்தையும் துறந்து பயணித்த மகாவீரரின் உன்னதம், நாடுகளெல்லாம் சுற்றிய குருநானக்கின் ஆளுமை, மானிடர் துன்புற்ற இடங்களுக்கெல்லாம் சுற்றி வந்த யேசுபிரானின் மேன்மை, இடைவிடாது சுற்றுப் பயணங்கள் செய்த தயானந்தரின் பெருமை ஆகியவற்றையும் விவரிக்கிறார்.
கல்வி, பண்பாடு, தன்மானம் ஆகியவை ஊர் சுற்றியின் முக்கிய தகுதிகள் என்கிறார் நுாலாசிரியர். பிறரது பயண அனுபவங்களின் வாயிலாகப் படித்து உலக அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் பரிந்துரைக்கும் ஒரு அரிய நுால்.