ஒரு நுாற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை. சிவராஜ யோகத்தில், 40 ஆண்டுகள் இருந்து சிவஞானம் பெற்றவர். இவர், தான் பெற்ற யோக ஞானத்தால் நான்கு நுால்களை எழுதியுள்ளார்.
‘திருமந்திர சம்பிரதாயம், காயசித்தி அல்லது சாகாக் கலை, காரியசித்தி விநாயகர் அகவல், திருவாசகமும் சிவராஜ யோகமும்’ என்ற நான்கு நுால்களையும் ஒரே தொகுப்பாக, மயிலை சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டுள்ளது, பாராட்டுக்கு உகந்த சிவத்தொண்டாகும்.
காரிய சித்தி, விநாயகர் அகவல், விநாயகர் பற்றிய உண்மை பொருளை ஆழ்ந்த நுட்பத்துடன் விளக்குகிறது.
இந்நுாலாசிரியர் தன் ஆன்ம ஆராய்ச்சிக் கூடத்திலே, 50 ஆண்டுகளாக பல துணிச்சலான ஆராய்ச்சிகளைச் செய்து அரிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். நம் முன்னோர் மூடாக்கு போட்டு மறைத்து வைத்த உண்மைகளை சிவயோகி, தமக்கே உரிய அதிகார தோரணையோடு, உணர்வு உடையவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இந்நுாலில் அம்பலப்படுத்தி இருப்பதாக நீதிபதி மகராசன் குறிப்பிட்டுள்ளார்.
‘கணபதியை மூலாதாரத்தின் அதிபதி’ என்று யோக நுால்கள் கூறுகின்றன. மூளையால் இந்த நிலையை உணர முடியாது. மூளையையும், தலையையும் கடந்து நிற்கும் நுண்ணிய ஆகாச அறிவால் தான் இதை உணர முடியும் (பக். 18). விநாயக புராணத்தின் விளக்கமும், யோக ரகசியமும் இந்நுாலின் வழியே விளக்கியுள்ளார்.
திருமந்திர உரை நுாலுக்கு சிவயோகி அளித்த முன்னுரை அற்புதம் மிக்கதாகும். உடலால் இம்மையில் பெற வேண்டிய அறம், பொருள், இன்பங்களையும் மறுமையில் அடைய வேண்டிய வீட்டு இன்பத்தையும் உடல் உள்ளபோதே பெற திருமந்திரம் வகை செய்கிறது (பக். 194).
திருவாசகமும் சிவராஜ யோகமும், பகுதியில் ஞானம் விஞ்ஞானம் பற்றி விளக்குகிறார். சிவபுராணம், கீர்த்தி திரு அகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் ஆகிய பகுதிகளுக்கு மிக நுட்பமான விளக்கங்கள் தந்துள்ளார். இதைப் படிப்பவர் ஆன்மிக ஞானம் கைவரப் பெறுவர்.
– முனைவர் மா.கி.இரமணன்