‘அறத்தொடு நிற்றல்’ என்னும் இந்நுால், 14 கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை, பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப் பெற்றவை என்று அறிய முடிகிறது. அழகிய அணிந்துரை, நுாலைப் படிக்கத் துாண்டும் நுழைவாயிலாக அமைந்து உள்ளன.
நுாலின், 14 கட்டுரைகளும், பெண்ணியம், கலை, இலக்கியம் என்னும் மூன்று பிரிவினுள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றுள் பெண்ணியம் குறித்த கட்டுரைகளே அதிகம்.
செவ்வியல் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இக்கட்டுரைகள், அக்காலப் பெண்களின் நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தலைவியை விட, தோழியே அதிகம் பேசினாலும், தோழியின் பிறப்பு, வளர்ப்பு குறித்தோ, அவளின் அக உணர்வு குறித்தோ சங்க இலக்கியங்கள் பேசவில்லை; பெண்பாற் புலவர்கள் பாடல்களிலும், இச்செய்தி வெளிப்படவில்லை.
ஆணின் பரத்தமையை ஏற்று வாழ வேண்டிய நிலையிலேயே பெண்கள் இருந்தனர்; காரணம், பொருளியல் வாழ்வு ஆணின் ஆளுமைக்குள் கட்டமைக்கப்பட்டே இருந்தது; பெண்களுக்கான உணவு குறித்த செய்திகள் பேசப்படவில்லை; கைம்பெண்களின் உணவே குறிப்பிடப் பெற்றுள்ளது.
கலை குறித்த நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை சங்க கால ஆடல் மகளிரது நிலையையும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பதினோரு ஆடல்களையும், இளங்கோவடிகளும் பரத முனிவரும் காட்டும் நாட்டிய அரங்கம் குறித்த கருத்துக்களையும் யாழின் மீட்டுருவாக்கமே வீணை என்னும் கருத்தையும் முன் வைக்கின்றன.
இறுதியாக இலக்கியம் சார்ந்த நான்கு கட்டுரைகள் அமைந்துள்ளன. மணிமேகலை காட்டும் தருக்க இயல் சிந்தனைகள் இறையியல் சார்ந்ததாக அமைந்துள்ளன; மணிமேகலை காட்டும் மனிதநேயம்; அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்தலே என்பன போன்ற பல சிந்தனைகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அறத்தொடு நின்று, ஒவ்வொரு பொருளையும் ஆய்ந்து, தான் கண்ட உண்மைகளைத் துணிவோடும் தெளிவோடும் முன்வைத்துள்ளது இந்நுால் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்