‘மக்கள் திலகம்’ என்று கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., அவர்களின் அரசியல் வரலாற்றை இந்நுால் பதிவு செய்துள்ளது.
காந்தியவாதியாகவும், நேதாஜியை நேசிப்பவராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்த எம்.ஜி.ஆர்., 1952ம் ஆண்டு, நடிகமணி டி.வி.நாராயணசாமி மூலம் அண்ணாதுரையின் அறிமுகம் கிடைத்த பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார் என்று அறிகிறோம் (பக். 15).
நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம், தி.மு.க.,வின் கொடியையும், கொள்கைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தார் என்றும் (பக். 18), அண்ணாதுரை அவர்கள் எம்.ஜி.ஆரிடம் காண்பித்த பண்பும், பாசத்தையும் விளக்குவதும் (பக்.36), அண்ணாதுரை மறைவிற்குப் பின், கருணாநிதி முதல்வராக வர, எம்.ஜி.ஆர்., காரணமாக இருந்தார் என விளக்குவதும் (பக். 44), 1972- டிசம்பர் மாதம், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு, சைதை துரைசாமி எலுமிச்சம்பழ மாலை அணிவித்த நிகழ்ச்சியை விளக்குவதும் (பக். 52), உட்பட பல தகவல்கள் உள்ளன.
எம்.ஜி.ஆர்., 1972ல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட போது, சத்தியவாணி முத்து, எம்.ஜி.ஆரை, ‘2000 வோல்ட் மின் சக்தி’ என்று கூறியதை நினைவுபடுத்துவதும் (பக். 69), 1972ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17ம் தேதி, அ.தி.மு.க., உருவானதை விளக்குவதும் (பக். 74).
கடந்த, 1973ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தேர்தலில் மாயத்தேவர் வெற்றியைக் கூறுவதும் (பக். 110), சத்துணவுத் திட்டத்தை விவரிப்பதும், எம்.ஜி.ஆரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதையும்,- அவரின் இறுதி முடிவை விளக்குவதும் நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
எம்.ஜி.ஆரின் அரசியல் பணி குறித்து விளக்கும் நல்ல நுால்.
-பேரா., டாக்டர் கலியன் சம்பத்து