இளைஞர்களுக்கு அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் விளக்க முற்பட்டுள்ளார் நுாலாசிரியர்.
இதில், பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்த்திருத்தம்...
இந்துத்துவம் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், தமிழகத்தில் திராவிட அரசியல் என பல தரப்பட்ட விஷயங்களை நாளேடுகள் பாணியில் கேள்விகளைக் கேட்டு, அவரே விடையளித்துள்ளார்.
மோடி அனைவரது வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொல்லவில்லை. (பக்.21), பிரதமர் வெளிநாடு போவதை விமர்சிக்கும் அனைவருமே வடிகட்டிய முட்டாள்கள் தான் (பக்.76), 49 சதவீதம் பேர் விவசாயத்தில் இருப்பதைக் குறைப்பதே நாட்டுக்கு நல்லது (பக்.78).
பா.ஜ.,வுக்கு இஸ்லாமியர்கள் அல்ல எதிரி; உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் தான் (பக். 145), ஹிந்துக்களுக்கு இணையான உரிமைகளை இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது தவறு.
பாகிஸ்தானில், சரி சமமாக கொடுக்கப்படுகிறதா? (பக்.157) இப்படிப் பல கருத்துக்கள் உள்ளன.
நடுநிலையோடு வாசகன் படிக்க வேண்டும் என்று கூறும் நுாலாசிரியரின் காட்டமான எழுத்துப் பிரயோகம், மோடி மீதும், பா.ஜ., மீதும் அனுதாபம் உள்ளோரையும் காயப்படுத்திவிடுமோ என்ற எண்ணம் எழும் அளவுக்கு சில விமர்சனங்கள் உள்ளன. பா.ஜ.,வின் பிரசார நுாலாக இதை வர்ணிக்கலாம்.
– பின்னலுாரான்