சைவ சமயக் காப்பியங்களில் திருவிளையாடற் புராணத்திற்கு தனி இடம் உண்டு. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், சுவை மிகுந்த நிகழ்வுகளாகும்.
பரஞ்சோதி முனிவர் அருளிய இந்நுால் மதுரை, கூடல், திருவாலவாய் ஆகிய காண்டங்களை கொண்டது. பக்தி சுவையுடன் விளங்கும் இந்நுால் சைவ அன்பர்களால் பெரிதும் கொண்டாடப்படுவதாகும். எளிய உரையால் இந்த நுால் சிறந்து நிற்பதற்கு, உரை எழுதிய, பேரா., பழ.முத்தப்பன் காரணமாவார்.
பாடற் கருத்துகளை தெளிவுடன் விளக்கிச் செல்வதோடு, ஆங்காங்கே சொற்பொருள் விளக்கத்தையும் தந்துள்ளமை, இந்நுாலாசிரியரின் புலமையை காட்டுகிறது.
தமக்குரிய சைவ சமய ஈடுபாட்டாலும், தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்டவருமான உரையாசிரியர், அழகிய முறையில் கருத்துகளை வழங்கியிருக்கிறார். பாடற் பொருளை நேர்நின்று விளக்கும் முறையாலும், ஓரளவு தமிழ் பயிற்சி கொண்டோர் நன்கு புரிந்து கொள்ளும் முறையாலும், இந்த உரை சிறந்து விளங்குகிறது.
பிராட்டியாரின் திருமணத்திற்காக நகரை அலங்கரிக்கும் மகளிரின் செயலை, ‘பரஞ்சோதியார் காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தெரிகிலர் தொழில் செய்வோர்’ என, குறிப்பிடுகிறார்.
பிராட்டியின் திருமணம் காரணமாக தங்கள் உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சியின் மயக்கத்தால், ‘காதில் அணிந்த குழைகளும், கையில் அணிந்த வளையல்களும், கண்டிகைகளும் கழுலுவதை அறியாதவர்களாய் நகரத்தை அலங்காரம் செய்தனர்’ என, எழுதி செல்வதில் எளிமையும் இனிமையும் தெளிவும் காணப்படுவதை உணரலாம்.
இவ்வாறு, பல இடங்களில் எல்லாரும் புரிந்து போற்றும்படியான உரையாக திகழ்கிறது. சைவ சமய அன்பர்கள், மிகவும் போற்றிக் கொண்டாடத்தக்க வகையில் அமைந்திருக்கும் இந்த உரை பாராட்டத்தக்கது.
ராம.குருநாதன்