துருக்கி எனும் துார தேசத்துக்கு, வாசிப்பாலும் வளர்ந்த சூழலாலும் இழுக்கப்பட்டு செல்கிறார் சாரு நிவேதிதா. அங்கு, தாம் பெற்ற அனுபவத்தை எழுத்தின் வழியே வாசகனுக்கு கடத்தும் அற்புத முயற்சி தான், ‘நிலவு தேயாத தேசம்!’ எவ்வளவு சிக்கலான விஷயத்தையும், போகிற போக்கில் சொல்லிச் செல்வது சாருவின் சாமர்த்தியம்; நிலவு தேயாத தேசத்திலும் அது சாத்தியமாகி இருக்கிறது.
இந்த புத்தகம் சுற்றுலா வழிகாட்டியாக எழுதப்படவில்லை. தமிழில் அத்தகைய பயண வழிகாட்டி நுால்கள் தான் அதிகம். அதனால், ‘நிலவு தேயாத தேசம்’ என்ற பயண நுால் குறித்தும், வாசகர்களுக்கு அப்படி ஒரு மனச்சித்திரம் எழக்கூடும். ஆனால், இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது, பயண நுால் குறித்த உங்கள் பார்வை அடியோடு மாறக்கூடும்.
பயணப்படுகிற தேசத்தின் வாழ்வியல் முறைகள், உளவியல், சமூகம், இசை, அரசியல், அழகியல் என்று அத்தனையும் தொட்டு செல்கிறது இப்பயண நுால். அவர், துருக்கியில் டீக்கடைக்கு சென்று டீ குடிக்கப்போனால் கூட, அதற்கொரு காரணப் பின்னணி இல்லாமல் இருப்பதில்லை.
தனிமனித குணங்கள், கலாசாரம், அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கும் சமூகத்தின் வரலாறு, புவியியல், அரசியல் சிக்கல்கள் என பலவற்றைப் பற்றி பேசுகிறார்.
சாருவின் புத்தகத்தை படிக்கும்போது, ‘கூகுள்’ தேடுதளத்தையும், ‘யூடியூப்’பையும் திறந்து வைத்துக் கொள்ளுதல் நலம். காரணம், ஒவ்வொரு பக்கத்திலும் புதுப் புது விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார்.
அவர் சிலாகித்து சொல்லும் எழுத்தாளர்கள், இசை ஆளுமைகள், இடங்கள் பற்றி அறிந்து கொள்ளும்போது வாசிப்பு இன்னும் வசப்படுகிறது. சாரு கதை சொல்லலின் அசாதாரண வேகத்துக்கு, இந்த புதிய அறிமுகங்கள் பாதுகாப்பான தடைக்கற்கள்.
துருக்கி போகப் போகிறேன் என்றதும், ஏதோ ஆப்கானிஸ்தான் போகப் போவது போல் என் நண்பர்கள் பார்த்தனர் என்று துவங்கி, முடிக்கும்போது முரணாக துருக்கி மீது காதலை எழுத்தாளர் ஏற்படுத்துகிறார்.
ஐரோப்பிய பெண்ணைவிட, துருக்கியின் அடிமைப் பெண் சுதந்திரமானவள் என்பது உட்பட, நாம் நம்ப மறுக்கும் ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்.
‘சரியான பயண அனுபவம் நம் மனத்தை புனிதமாக்கும்’ என்று ஆழ்ந்த புரிதலோடு கிளம்பிய பயணியின் பயண அனுபவத்தை தவறவிடாதீர்கள்.
– ஆரூர் சலீம்