உ.வே.சா., தமிழின் மாண்பை காத்த பெருமகனார். அவர் தமிழன்னைக்கு செய்த தொண்டுகள் ஏராளம். தற்போது அவர் பெருமையை இந்த நுால் வெளிச்சமிட்டு காட்டுகிறது. உ.வே.சா., நுால் நிலைய வெளியீடான இப்புத்தகம், அவரோடு தொடர்பு கொண்ட பலர் எழுதிய கடிதங்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.
அவரோடு சம காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்கள் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதியாக மலர்ந்த இந்த நுாலில், ஜி.யு.போப் எழுதிய கடிதமும் அடங்கும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில், 1854ம் ஆண்டில் காகித அஞ்சல் தலைகள் வந்தன.
தமக்கு வந்த கடிதங்களை, பெருமகனார் உ.வே.சா., பத்திரப்படுத்தி வைத்ததால், இந்தக் கருவூலம் இன்று தமிழர்களின் கைகளில் நுாலாகத் தவழ்கிறது. இக்கடிதங்கள் பல விஷயங்கள் தொடர்பானது என்றாலும், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தி இருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, வித்துவான் தியாகராஜ செட்டியார் எழுதிய கடிதம், 1880ம் ஆண்டு செப்டம்பர் தேதியிட்டது. அதில், ‘கல்லுாரி பாடங்களை ஜாக்கிரதையாய் நடத்தி, நல்ல பேர் வரும்படி நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருப்பது, அன்றைய ஆசிரியர்கள் பின்பற்றிய மரபைப் பிரதிபலிப்பதாகும்.
மற்றொரு கடிதம், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மனைவி காவேரி அம்மாள், 1982ம் ஆண்டில், உ.வே.சா.,வுக்கு எழுதிய கடிதத்தில், ‘யெனக்கு சிலவுக்கு முடையாயிருப்பதால், தாங்கள் தயவு செய்து ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பினால் நலமாயிருக்கும்... எனக்கு அப்பா இருந்ததுபோல எப்படி நடந்ததோ, அது போல தாங்கள் நடத்த வேண்டியது’ என்ற கடிதம் முக்கியத்துவம் பெற்றது.
‘அப்பா’ என்பது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடுவது ஆகும்.
இது, அக்கால தமிழறிஞர்கள் வாழ்வின் தகுதியைச் சுட்டிக்காட்டுவன.
இவை போன்ற பல கடிதங்கள் தமிழை நேசிப்பதாகவும், வெளி உலகில் பறைசாற்றும் பலர் இப்புத்தகத்தை நேசித்தால், தாங்கள் பணத்திற்காக பேசிய வெறுமைகள் புரியும்.
பள்ளி பாடத்திட்டங்களில் ஒன்றிரண்டு கடிதங்களை உரிய விளக்கங்களுடன் பாடமாக வைத்தால், தமிழக இளைஞர்கள் தமிழை மதித்து நேசிப்பர்.
– எம்.ஆர்.ஆர்.,