புத்தகத்தை பார்த்தவுடன், படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
நுாலாசிரியரின் சீருடையுடன் கூடிய படமும், பக்கத்தில் முத்தான வாசகம், ‘முயற்சிகள் தோற்கலாம்; முயற்சிப்பவர் தோற்பதில்லை’ என்ற வாசகமும், அமரகவி, தாராபாரதியின், ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது. முயற்சியின் மேன்மையை வலியுறுத்துகிறது.
ஆண்மை என்பது ஆளும் தன்மை என்ற பொருளில், ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி, செய்வதற்கு உரிய செயலை சரியாக செய்வதும், செய்து முடிப்பதும் ஆகும். மேலாண்மை எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது. காவல் துறையின் மேலாண்மையை பல நோக்கில் சிந்தித்து, வெற்றி தரும் மேலாண்மை பண்புகள் என்ற பெயரில் வழங்கிஉள்ளார்.
தலைமை மேலாண்மை துவங்கி, 30வது தலைப்பாக நட்பு மேலாண்மையில் முடிந்துள்ளது. இது ஆளுமையில் துவங்கி, அன்பில் முடிவதாக கொள்ளலாம்.
ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு பொருத்தமான திருக்குறளை எடுத்துக்காட்டி, விளக்கி இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், சான்றோர்களின் வாசகத்தை எடுத்துக்காட்டியிருப்பது, வாசகருக்கு படிப்பதை மெருகூட்டுகிறது.
தலைவர் என்பவர் தன்னை பின்தொடர்பவர்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்பவராக இருத்தல் வேண்டும் (பக்., 17). தகவல் மேலாண்மை என்பது தகவலை எப்படி, எங்கு பெறுவது என்பதையும், கிடைக்கும் தகவல்களை, என்ன செய்ய வேண்டும் என்பதையும் காவல் துறையினர் தெரிந்திருத்தல் மிக அவசியம்.
திறமையான தகவல் மேலாண்மை, காவல் துறையில் முக்கிய பதவி வகிக்கிறது. நேர மேலாண்மை என்பது உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் திட்டமிட்டு செயல்பட்டால், வாழ்க்கையின் சவால்களை வெல்வது எளிது (பக்., 132).
காவல் துறையினருக்கு என்று குறிப்பிட்டு இருந்தாலும், அனைத்து தரப்பினரும் படித்து பின்பற்ற வேண்டிய நுாலாகும். கற்றபடி நிற்க என்பதற்கு எடுத்துக்காட்டான நுாலாகும்.
– பேராசிரியர் ரா.நாராயணன்