தன் பணிக்காலம் முழுவதையும், ஒளி, ஒலி ஊடகங்களுடன் தன்னை இணைத்து, ஊடகங்களை கல்விக்காகவும், அறிவியல் விழிப்புணர்வுக்காகவும் பயன்பட வைத்தவர் ஸ்ரீதர். அவரது வாழ்க்கை வரலாற்றை, ‘ஊடகத் தேனீ ஸ்ரீதர்’ என்ற தலைப்பில் இந்த நுாலை வெளியிட்டுள்ளது.
சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில், பகுதி நேர தயாரிப்பாளராக, அறிவியல் நிகழ்ச்சிகளை தயாரிக்க துவங்கிய ஸ்ரீதர், அ.இ.வானொலியின் சயின்ஸ் ஆபீசர், கோல்கட்டா தொலைக்காட்சி நிலைய இயக்குனர் என, பொது சேவை ஒலி, ஒளிபரப்பு துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
வைதீக பிராமண குலத்தில் பிறந்தவன் என்று வெளிப்படையாக கூறும் இவர், டில்லி இக்னோ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ரூர்கேலா ஐ.ஐ.டி., காமன்வெல்த் அமைப்பு என, பல்வேறு அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கல்வி ஊடக மையங்களில், உயர் பொறுப்புகளில் இருந்தவர்.
கல்விக்காக, ஊடகத்தை பயன்படுத்தும் செயல் திட்டத்தை வைத்திருக்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுவது தான் இவரது நோக்கம். இந்த அமைப்புகள் ஒவ்வொன்றிலும், ஸ்ரீதர் ஆற்றிய சமுதாய பணிகள் என்ன என்பதை, இந்த நுால் மிக அழகாக விவரிக்கிறது.
வாடகை வீட்டில் செயல்பட்டு, பிற நிலையங்களின் நிகழ்ச்சிகளை வெறும் மறு ஒலிபரப்பு மட்டுமே செய்து வந்த, கோவை வானொலி நிலையத்தை, உதாரணமான நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிலையமாக மாற்றியது.
இந்தியாவின் முதல் சமுதாய வானொலியை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவியது என, இவரது பல்வேறு பணிகளை பற்றி படிக்கும்போது, அரசு துறையில் ஒருவர் இவ்வளவு படைப்புத் திறனுடனும், கூர் உணர்வுடனும் இறுதி வரை பொது நலத்திற்காகவே பணியாற்ற முடியுமா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.
– நர்மதா