மேடை நாடகங்கள் மற்றும் தெரு நாடகங்களில் நீண்ட அனுபவம் மிக்க கலைச்செல்வன், திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிஉள்ளார்.
எங்கிருந்து தொடங்குவது, திரைக்கதை, திரைக்கதை நுட்பங்கள், கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற தலைப்புகளில் கதை மற்றும் இயக்கம், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, காட்சி அமைப்பு, தயாரிப்பிற்கும் பிந்தைய வேலைகள் போன்ற தலைப்புகளில் சினிமா இயக்கம் பற்றி கூறுகிறார்.
‘உலக வாழ்வை உற்றுக் கவனித்து, அதன் சாரத்தைப் பிழிந்து தருபவனே கலைஞன்’ என்று கதை என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்!
திரைப்படங்கள் எழுதப்படுகின்றன, நடிக்கப்படுகின்றன, இயக்கப்படுகின்றன, படம் பிடிக்கப்படுகின்றன, தொகுக்கப்படுகின்றன, இசையமைக்கப்படுகின்றன... ஆயினும், எந்தக் காட்சி தேவை, தேவையில்லை.
இதுபோன்ற லட்சக்கணக்கான கேள்விகளுக்கு விடைகளை, திரைக்கதை ஆசிரியர் தான் தீர்மானிக்கிறார் என, ஏர்னஸ்ட் லெஹ்மான் சொன்னதையும் எடுத்தாள்கிறார். எழுத்து வடிவில் உள்ள சம்பவத்தை காட்சிப்படுத்த வேண்டும். பிம்பங்களின் மூலம் கதை சொல்ல வேண்டும்.
இதைச் செய்வதற்கு நடிகர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர் எனப் பல துறையினர் இணைந்து வேலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் இயக்குவது இயக்குனரின் வேலை என்று, இயக்கம் என்ற பகுதியில் எழுதுகிறார்.
கதை எழுதவும், திரைக்கதை எழுதவும், டைரக் ஷன் செய்யவும் ஆசைப்படுவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். திரை இலக்கியப் பொக்கிஷம்!