மானிடவியல், இன வரைவியல் போன்ற துறை வழியாக ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்பாட்டுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இந்த நுால், தமிழ்ப் பழங்குடியினரின் பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளை விரிவாகப் பேசுகிறது.
இந்த நுாலில் உள்ள பன்னிரு கட்டுரைகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டிருப்பதோடு, அரிய பல தகவல்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறது. இதைப் பதிப்பித்திருக்கும் நா.வானமாமலை அரிதின்முயன்று இதைத் தொகுத்துள்ளார்.
கட்டுரைகளை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தேடல் முயற்சியுடன் கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.
பி.எல்.சாமி எழுதியுள்ள வேலன் வழிபாடு, கண்ணகியும் பகவதி வழிபாடும், கோ.சுப்பையா எழுதியுள்ள கோத்தர்களின் சாவு விழா மற்றும் அவர்களின் உறவுமுறைச் சொற்கள், பெரியாழ்வார் எழுதியுள்ள இருளர் திருமணம்.
பளியர் பற்றிய ஆ.சிவசுப்ரமணியத்தின் கட்டுரை, கோ.சீனுவாச சர்மாவின் நரிக்குறவர் வாழ்க்கை முறை, அவர்களின் சடங்குகள் ஆகியன பற்றிய கட்டுரை என பல உள்ளன. குறவர் வேறு; நரிக்குறவர் வேறு. இவர்கள் தங்களை வாக்ரி என்று அழைத்துக் கொள்கின்றனர்.
நரிக்குறவர் என்று இவர்கள் அடையாளப்படுத்தப்படுவர். இவர்கள் பெரும்பாலும் உணவு வேட்டையில் ஈடுபட்டவர்கள். சிறு சிறு விலங்குகளைக் கொன்று, உண்டு வாழும் இவர்கள், நாடோடி வாழ்க்கையினர்.
இருளர் என்போர் விஜயநகரப் போரின் விளைவாகக் குடிபெயர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இருளப் பள்ளர் என்ற இன்னொரு வகை இனத்தவர்கள், திருமணம் பேசும்போது கைகளில் மரக் குச்சிகளைக் கொண்டு செல்வது வழக்கம்... இவர்கள் பாடும் நாடோடிப் பாடல்களில் இயற்கை பற்றிய ஆக்கம் மிகுதி.
பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் பண்பாட்டு முறைகளையும் மானிடவியல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு, அவை பற்றிய தேடல் முயற்சியோடு எழுதப்பட்டுள்ள இந்நுால், திராவிடப் பழங்குடி மக்கள் பற்றி ஆராய்வோருக்கு மிகுந்த பயனளிக்கும்.
– ராம.குருநாதன்