அண்மையில் மறைந்த, உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் (அவரது கழுத்துக்குக் கீழே எந்த உடலுறுப்பும் இயங்காது) படைத்த, ‘தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நுாலில், அகிலம் எப்படித் தோன்றியது.
காலமும் இடமும் சேர்ந்து அதை வளர்த்து, இன்றைய நிலைக்கு எப்படி கொண்டு வந்தது என்ற ஆய்வை நுாலாசிரியர் தம் அறிவியல் மெய்யியல் சிந்தனைகளோடு கலந்து புது நுாலாக உருவாக்கியுள்ளார்.
பூரண சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் நிலாவில் வட்டமாக விழுவதால், பூமி உருண்டை என்று ஆய்வு செய்த அரிஸ்டாட்டில் துவங்கி, தாலமி, கலிலியோ, நியூட்டன், ஒளி வெறும் மின்காந்த அலையே என்ற மேக்ஸ்வெல், ஒளியின் வேகத்தை சார்பியல் கோட்பாடுகளுடன் விளக்கிய ஐன்ஸ்டின்.
ஆகாயம் இயங்கிய படியே இருக்கும் (ப்ரீட்மேன்) செம்பெயர்ச்சியை ஆதாரமாக வைத்து, கேலக்ஸிகள் ஒன்றைவிட்டு ஒன்று, குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்லும் (ஹப்புள்) தொடக்கத்தில் அகிலம் சிறிதாக இருந்திருக்க வேண்டும் (கேமோவ்)(பக்.,86).
அகிலத்தின் ஆதிஅக்னி இன்று தணிந்து நுண்ணலையாய் ‘அனலாய்’ வியாபித்திருக்க வேண்டும் (டிக்கே, பீபிள்ஸ்) அகிலம் ஆதியந்தம் இல்லாதது அல்ல (பென்ஸியஸ், வில்ஸன்)(பக்., 87) இப்படியாக அறிவியலை விரித்து, துகள்கள், விசைகள், கருந்துளைகள் என விளக்கி, வெப்பத்தால் விரியும் ஒளிக்கோளமாகும் நட்சத்திரமே சூரியன் (பக்.,156).
நிகழ்ச்சியின் இடைவெளி மட்டுமல்ல, நிகழ்ச்சியின் போக்கையும் குறிப்பது காலம் (பக்., 215), அதைக் கணக்கிடும் முறைகளை அறிவியல் பூர்வமாக அணுகியுள்ளார்.
அகிலத்திற்கு ஏகத்துவ துவக்கம் அவசியமில்லை; வடிவமும் தேவையில்லை (பக்.,242) என்று கூறுகிறார் நுாலாசிரியர்.
‘விஞ்ஞானிகள் தத்துவ நியாயங்களை நெருங்கக் கூசுகின்றனர். தத்துவ வாதிகளிடம் தகுந்த அறிவியல் யோசிப்புத் தன்மை இல்லாதிருக்கின்றனர்’ என்று ஹாக்கிங் கருத்தோடு நிறைவு செய்திருப்பது, முடிவிலா அகிலத்தின் விளக்கம் போல விரியும் அறிவியல் என்பதைச் சுட்டுகிறது.
மாணவர்கள் மட்டுமன்றி அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்குமே பயன்படக் கூடிய அருமையான அகிலம் பற்றிய விளக்க நுாலிது.
– பின்னலுாரான்.