காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது.
அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம்.
ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், வாழ்க்கை பாழாகி விடும். நாட்கள் நகர வேதனை தரும் என்பதை, தெளிவாகக் காட்டியுள்ளார். இந்த நுாலில், பொருளடக்கம் என்று தனியே இல்லாவிட்டாலும், ஏழு தலைப்புகளில் நுால் பேசுகிறது.
முத்தான முதல் கடிதம், மனைவிக்கு ஒரு கடிதம், இதயத்தை ஈரமாக்கும் கடிதம், கண்ணீரால் எழுதப்பட்ட கடிதம், பிரிவதற்கு அல்ல திருமணம், நான் எழுத நினைத்த கடிதம், உள்ளத்தை உருக்கும் நினைவுகள்.
பிரிவுத்துயர் பெரும் துன்பம் தரும். எப்படியாவது, மனைவி மனம் மாறி சேர்ந்து வாழ வேண்டும் என்று, ஏங்கித்தவித்து நுாலை முடிக்கிறார்.
சேர்ந்து வாழ ஆசிரியர் தரும் செய்திகளாக விட்டுக் கொடுத்தல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்ளுதல், தவறு எனில் தவறாது மன்னிப்பு கேட்டல், நற்செயல்களைப் பாராட்டுதல்.
இவற்றை மேற்கொண்டால், வாழ்வில் பிரிவு என்பதே இல்லை. சொர்க்கத்தை இங்கேயே காணலாம். இன்றைய இளம் தம்பதியருக்கு, இந்த நுால் பெரிதும் உதவும். சமுதாயத்திற்குப் பயனுள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்