வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக்கெடும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நுால் முழுவதும் துன்பம் வருமுன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
வெள்ளம் வருமுன் அணை போடுபவன் புத்திசாலி என்ற வாசகத்திற்கேற்ப, கஷ்ட நஷ்டம் வருவதற்கு முன் அதை தடுக்கும் வழிமுறைகள் இந்நுாலில் உள்ளன.
வியாபாரத்தில் தொழிலில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்குரிய கருத்துகள் இந்நுாலில் உள்ளன. தொழில் வர்த்தகம், நிர்வாகம், யாவற்றிலும், பாதுகாப்பான உபகரணங்கள், தற்காப்பு இன்றைய உலகிற்கு எப்படி தேவைப்படுகின்றன என்பதையும், வணிகத்துறையில் நிகழ்ந்த, தீ விபத்து, திருட்டு மற்றும் கையாடல்களால் ஏற்பட்ட நஷ்டம், உண்மையற்ற ஊழியர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறு சிறு சம்பவங்கள் மூலம் நுால் விளக்கிச் சொல்கிறது.
பிரச்னை, பிரச்னைகளுக்குத் தீர்வு என்ற முறையில் நுால் அமைந்துள்ளது. தொழில் துவங்க, தொழில் துவங்கியோர்க்கும், மேலாண்மைக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் தேவையான கருத்துகள் உள்ளன. ஆசிரியர், கலால் துறையில் பணியாற்றிய போது தாம் கண்ட அனுபவங்கள் தரப்பட்டுள்ளன.
தொழில் பாதுகாப்பு துவங்கி, இடி, மின்னல், தீ விபத்து, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு காப்பீடு எடுத்துக்கொள்வது மிக அவசியம் (பக்., 97) என்று கூறப்பட்டுள்ளது.
நுால் எளிய, இனிய தமிழ் நடையில் அமைந்துள்ளது. நுாற்பயன் இன்பமாய் வாழவும், துன்பம் தவிர்க்கவும் துணை நிற்கும் நுால் எனலாம்.
–பேராசிரியர் நாராயணன்