கவிஞர்களின் கவிதைகளில் மணந்து, சங்க இலக்கியங்களில் இடம் பெற்று அழகூட்டும் மலர்களின் பெயர்களைக் கொண்டு, கதைகள் மூலம் சிறார்களுக்கு அறிவுரை புகட்டும் நுால். சிறுவர்களும், மாணாக்கர்களும் விரும்பி படித்து முடிக்குமாறு விறுவிறுப்புடன் கதைகள் அமைந்துள்ளன.
இடையிடையே, ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனும் குறுந்தொகை பாடல் போன்றவற்றை கொடுத்து, அவற்றின் விளக்கத்தை, கதைப் பாத்திரங்கள் மூலம் விளக்கியுள்ளமை நன்று.
கேரளாவின் மாநில மலர் கொன்றை; அதை அஞ்சல் தலையில் வெளியிட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டின் தேசிய மலர் கொன்றை (பக்., 19) என்பன போன்ற பொது அறிவு பாடத்திற்கு துணை செய்யும் செய்திகள் உள்ளன. அல்லி எனும் ஆம்பல் மலருக்கு வவ்வால் உதவும் செய்தி, பலருக்கு புதுமையாக தோன்றலாம்.
மலர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, பெயர்கள் பெறுகின்றன என்பதை அரும்பு, நனை, மொக்கு முதலானவற்றை குறிப்பிட்டு, விளக்கமும் தந்துள்ளார் ஆசிரியர். எளிய தமிழில் ஆர்வமூட்டும் சிறுவர் கதைகள். ஒருமை, பன்மை பிழைகள் உள்ளன.
–பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்