‘இறைவனை அடைவதற்கும், கோவிலுக்கு செல்வதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று சுவாமி விவேகானந்தரிடம் கேட்டார் ஒரு பக்தர்.
புன்முறுவலுடன், ‘எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்றார் விவேகானந்தர்.
‘என்ன இது... இவரும் சம்பந்தமே இல்லாமல் கேட்கிறாரே...’ என்று நினைத்தவாறு ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினார்.
தண்ணீரை வாங்கிக் குடிக்காமல், பக்தரைப் பார்த்து சிரித்தார்.
‘நான் தண்ணீர் தானே கேட்டேன்... எதற்கு இந்த சொம்பு?’
‘சுவாமி, சொம்பு இல்லாமல் தண்ணீரை எப்படி எடுத்து வர முடியும்?’
‘கோவிலும் இது போலத்தான். பக்தி எனும் நீரை பருக வேண்டுமென்றால், கோவில் எனும் சொம்பு அவசியம்!’ என்றார் விவேகானந்தர்.
ஆம்... கோவில் எவ்வளவு அவசியம்?
எவ்வளவு ஆனந்தம் வேண்டுமோ... எவ்வளவு அமைதி வேண்டுமோ... எவ்வளவு அதிசயம் வேண்டுமோ... அவ்வளவு அவசியம்!
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க கூடாது’ என்ற பழமொழி எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என்பதை இந்த புத்தகம் உணர்த்தும்.
பல்வேறு இந்து தெய்வங்களின் பல்வேறு தனித்தன்மைகள் குறித்து அழகாக ஆராய்கிறது இந்த நுால்.
‘தினமலர் – ஆன்மிக மலர்’ இதழில், 24 வாரங்கள் தொடராக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற, ‘தெய்வ தரிசனம்’ தொகுக்கப்பட்டு, நுாலாக வெளிவந்துள்ளது.
– வெற்றி